திருமலைச் சருக்கத்தோடு கூடிய 73 பகுதிகளைக் கொண்ட பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரில் நிறைவுறுகிறது.
-
முதலில் வெள்ளானைச் சருக்கம், பின்னர் சுந்தரர் நீங்கலாக 62 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் ஆகிய 71 பிரிவினருக்கும் ஓரோர் பகுதி - இறுதியில் வெள்ளானைச் சருக்கம்).
திருத்தொண்டர் புராணத்தின் காவிய நாயகர் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளே. ஆதலின் வன்தொண்டரின் திருப்பெயர் கொண்ட ஒரு தனிப்பகுதி என்றில்லாமல், பின்வரும் 7 பகுதிகளில் தம்பிரான் தோழரின் வரலாற்றினைத் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார்.
(1)
(திருமலைச் சருக்கம்):
அவதார நோக்கத்தில் துவங்கி, திருமண நிகழ்வில் தடுத்தாட்கொள்ளப் பெறுதல்; திருவதிகையில் திருவடி தீட்சை, சிதம்பர தரிசனம்; சீர்காழி எல்லையில் சிவ தரிசனம்; திருவாரூரில் தம்பிரான் தோழராதல்; பரவையாருடனான திருமண நிகழ்வுகளோடு, தேவாசிரியன் மண்டபத்தில் திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்யும் நிகழ்வு வரையில் இப்பகுதி விவரிக்கின்றது.
(2)
(விறன்மிண்ட நாயனார் புராணம்):
விறன்மிண்டனார் சுந்தரரின் மீது முனிவு கொள்ளுதல்; பின்னர் திருத்தொண்டர் தொகையினைச் செவிமடுத்து அகங் குளிர்ந்து வன்தொண்டரை வாழ்த்துதல்' முதலிய அரிய நிகழ்வுகள் (11 திருப்பாடல்களைக் கொண்ட) இப்பகுதியில் மட்டுமே பேசப் பெறுகின்றது.
(3)
(சோமாசி மாற நாயனார் புராணம்)
சோமாசி மாற நாயனார் சுந்தரருடன் பெருநட்பு பேணிய அரியதொரு குறிப்பு (6 திருப்பாடல்களைக் கொண்ட) இப்பகுதியில் மட்டுமே குறிக்கப் பெறுகின்றது.
(4)
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்):
குண்டையூரிலுள்ள நெல்மலைகளைச் திருவாரூரில் சேர்ப்பிக்க வேண்டுதல்; புகலூர் மற்றும் முதுகுன்றத்தில் பொன் பெறுதல்; பொன்னை முதுகுன்ற ஆற்றிலிட்டுத் திருவாரூர் குளத்தில் எடுத்தல்; இருவேறு தலங்களில் இறைவரின் திருவருளால் பசி நீங்கப் பெறுதல்; ஒற்றியூரில் சங்கிலியாருடன் திருமணம்; கண் பார்வை மறைதல்; காஞ்சி மற்றும் திருவாரூரில் இழந்த கண் பார்வையைப் பெற்று மகிழ்தல்; பரவையாரிடம் சிவபரம்பொருள் சென்றருளிய தூது; கலிக்காம நாயனார் முனிவு கொண்டு பின்னர் நட்பு பாராட்டுதல்; கலிக்காமருடன் திருப்புன்கூர் தரிசனம் முதலிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் பேசப் பெறுகின்றன.
(5)
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்):
சேர நாயனார் அறிமுகத்தில் துவங்கி, சேரனாருக்கு இறைவர் சுந்தரரை அறிவித்தல்; சேரர்கோன் சுந்தரரோடு நட்பு பாராட்டுதல்; சுந்தரரோடு திருத்தல யாத்திரை; வன்தொண்டர் சேரனாருடன் அஞ்சைக்களம் செல்லுதல்; அஞ்சைக்கள தரிசனம்; திருவாரூருக்கு மீள வருதல்; திருமுருகன்பூண்டியில் வேடர் பரி நிகழ்வு முதலிய பிரதான நிகழ்வுகளை இப்பகுதி விவரிக்கின்றது.
(6)
(பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்)
சுந்தரரின் சமகாலத்து நாயனார். 'வன்தொண்டரை அகக் கண்களால் மட்டுமே தரிசித்து அவரைத்தம் ஞானகுருவெனக் கொண்டு போற்றி, தம்பிரான் தோழருக்கு ஒரு நாள் முன்னரே திருக்கயிலை ஏகிய' அற்புத நிகழ்வு இப்பகுதியில் மட்டுமே பேசப் பெறுகின்றது.
(7)
(வெள்ளானைச் சருக்கம்):
சுந்தரரின் 2ஆம் அஞ்சைக்கள யாத்திரையில் துவங்கி, அவிநாசியில் முதலை வாயியினின்றும் மாண்ட பிள்ளையை மீண்டெழச் செய்தல்; சேரனார் அரண்மையில் தங்கியிருத்தல்; அவதார நிறைவிற்காக இறைவரிடம் விண்ணப்பித்தல்; வெள்ளை யானையில் திருக்கயிலை யாத்திரை; சேரனாருடன் திருக்கயிலைப் பதம் பெற்று மகிழ்தல் ஆகிய நிகழ்வுகள் இங்கு விவரிக்கப் பெறுகின்றன.






























