(1)
சுந்தரர், திருவாரூர் செல்லும் வழியில் சீர்காழியின் எல்லையை அடைகின்றார். ஞானசம்பந்த மூர்த்தி அம்மையப்பரின் பேரருளைப் பெற்றுள்ள புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையை வணங்கியவாறு வலமாகச் செல்லுகையில், திருத்தோணிபுர இறைவர் திருநிலை நாயகி அம்மையுடன் எதிர்க்காட்சி அளித்தருள்கின்றார்,
(பெரிய புராணம் திருமலைச் சருக்கம் - பாடல் 258):
பிள்ளையார் திருஅவதாரம் செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேன் என்று ஊரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கைஇடம்
கொள்ளு மால்விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள!!!
(2)
வன்தொண்டனார், பெருகும் அன்புடன்; கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் அம்பிகை பாகத்து அண்ணலைப் பணிந்து, 'திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள அதே திருக்கோலத்தில் திருத்தோணிபுர இறைவரை இவ்விடத்தே கண்டு கொண்டேன்' என்று செந்தமிழப் பாமாலையால் போற்றி செய்கின்றார்,
(திருமலைச் சருக்கம் - பாடல் 259):
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்திரை வேலையில் மிதந்த திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார்.
(சுந்தரர் தேவாரம் - சீர்காழி - முதல் திருப்பாடல்)
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்த எம்தலைவனை; மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை; எங்கள் பிரானை
காதில் வெண்குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே!!
(3)
இவ்விடத்தில் ஒரு நுட்பம், முன்னர் நாவுக்கரசு சுவாமிகள் மீதிருந்த பெருமதிப்பினால் திருவதிகையில் பாதம் பதிக்காது எல்லையிலேயே தங்கியிருந்த சுந்தரனாருக்கு இறைவர் முதிய வேதியரொருவரின் வடிவில் எழுந்தருளி வந்து திருவடி தீட்சை நல்கியருளினார். இம்முறையும், சம்பந்தமூர்த்தி மீதுள்ள அதீத பக்தியினால் சீகாழி நகருள் புகாது வலமாய் வணங்கிச் செல்லும் வன்தொண்டருக்குத் தோணிபுர இறைவர் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார்.
'மெய்யடியார் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டொழுகினால் சிவமூர்த்தி திருவுள்ளம் மிக மகிழ்ந்து, நம்மைத் தேடி வந்து விசேஷமாய் அருள் புரிவார்' என்பதே இந்நிகழ்வுகள் நமக்குணர்த்தும் நுட்பம் (தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே)!!!!
No comments:
Post a Comment