சுந்தரர் (சேரமான் நாயனாரிடம் விடைபெறும் நெகிழ்வான நிகழ்வு):

சுந்தரர் நெடுநாட்கள் ஆரூர் இறைவரைப் பிரிந்திருக்க மாட்டாமல், உடன் பயணித்து வந்திருந்த திருத்தொண்டர்களுடன் மலை நாட்டிலிருந்துப் புறப்பட்டுச் செல்ல முனைகின்றார். அது கண்டு சேரனார் உளம் அழிந்தவராய், 'இன்று உம்முடைய பிரிவினை ஒருசிறிதும் தரிக்கவொண்ணாத நிலையில் இருக்கின்றேன், யாது செய்வேன்?' என்று பெரிதும் கலங்கி நிற்கின்றார். வன்தொண்டரும் 'நீர் இதற்காக சிறிதும் வருத்தமுறாமல், பகைவரைப் புறங்காணச் செய்து நல்லாட்சியை நல்கியிருப்பீர்' எனும் ஆறுதல் மொழியினைப் புகல்கின்றார்.   

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 158):
வன்தொண்டர் முன்எய்தி மனமழிந்த உணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன் என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே உமது பதியின் கணிருந்து 
அன்றினார் முனைமுருக்கி அரசாளும் எனமொழிந்தார்

சேரனார் கண்ணீர் பெருக்கி, 'அடியவனுக்கு 'மண்ணுலக; விண்ணுலக' ஆட்சி யாவுமே தம்முடைய திருவடி மலர்களைப் பேணி இருத்தலன்றோ?, எனினும் 'திருவாரூருக்குச் செல்ல வேண்டும்' எனும்  தம்முடைய சங்கல்பத்தினை மறுத்துக் கூறவும் அஞ்சிப் பரிதவித்து நிற்கின்றேன்' என்று பணிகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 159):
ஆரூரர் மொழிந்தருள அதுகேட்ட அருள்சேரர்
பாரோடு விசும்பாட்சி எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித் திருவாரூர்க்கெழுந்தருள
நேரூரும் மனக்காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்

சேரனாரின் இந்நிலை கண்டு நெகிழ்ந்துருகும் சுந்தரர், 'என் இன்னுயிரினும் மேலான ஆரூர் இறைவரை இனியொருக் கணமும் பிரிந்து அடியேனால் தரிக்க இயலாது, ஆதலின் பிறை சூடும் பரம்பொருளின் பேரருளால் நீர் இங்கிருந்து ஆட்சி புரிவீர்' என்று அன்புக் கட்டளையிட்டுச் சேரர்கோனை வணங்குகின்றார். சேரனாரும் ஒருவாறு உள்ளத்தினைத் தேற்றிக் கொண்டு, அது வரை கருவூலத்தில் சேர்ந்துள்ள விலையுயர்ந்த பொன்; நவமணிகள்; ஒளி பொருந்திய பல்வேறு அணிவகைகள்; ஆடைகள்; நறுமணப் பொருட்கள் என்று யாவற்றையும் பற்பல பெரும் பொதிகளாகச் செய்வித்து, அவற்றினை ஏந்திச் செல்ல ஆட்களையும் நியமித்து, அவர்களை முன்செல்லுமாறு விடுக்கின்றார். 

பின் தம்பிரான் தோழரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளைப் பணிகின்றார், நம்பியாரூரரும் எதிர் தொழுதவாறு சேரர்கோனைத் தாங்கியெடுத்து அவர்தம் திண்தோள்களை ஆலிங்கனம் புரிந்து நெகிழ்வுடன் விடைபெற்றுச் செல்கின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 163):
மற்றவற்றின் பரப்பெல்லாம் வன்தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத் தொழுதெடுத்துப் புனைஅலங்கல்
வெற்பியர் தோளுறத் தழுவி விடையளித்தார் வன்தொண்டர்

No comments:

Post a Comment