சுந்தரர் (பரவையாரின் கோபத்தினை நீக்கியருளுமாறு இறைவரிடம் விண்ணப்பித்தல்)

(1)
அப்பொழுது நள்ளிரவு வேளை, வன்தொண்டனார் செயலொன்றும் அறியாதவராய் தேவாசிரியன் மண்டபத்தில் தனிமையில் வீற்றிருக்கின்றார். 'சுந்தரர் சார்பாக எவர் பேச வந்தாலும் உயிர் துறப்பேன்' எனும் பரவையாரின் கூற்றினை எண்ணியெண்ணி உளம் வெதும்பி 'எமை ஆளுடைய ஐயனே, இனி நீரே எழுந்தருளி வந்தாலன்றி இத்துன்பம் தீரப் போவதில்லை' என்று ஆரூர் முதல்வரின் திருவடிகளை நினைகின்றார்.  

(2)
முன்னர் தாமே சென்று வலிந்து அடிமை கொண்ட தோழரின் இந்நிலையை ஆரூர் இறைவர் பொறுப்பரோ? உலகீன்ற உமையன்னையின் வளையல் தழும்பையும், திருமுலைச் சுவடையும் திருமேனியில் கொண்டருளும் ஆரூர் முதல்வர், தெய்வங்களும் காண்பதற்கரிய தன் திருவடிகள் தோய, சுந்தரர் முன்பாக எழுந்தருளித் தோன்றுகிறார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 324)
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியாதிருக்க வல்லரே; முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார், தொண்டர் தாம்காணும்
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படிதோய

(3)
நம்பிகளுக்கு இது நெடுநாட்களுக்குப் பிறகு கிடைக்கப் பெறும் சிவதரிசனம். ஆரூருறைப் பரம்பொருள் நேரில் எழுந்தருளி வரப்பெற்ற அதீத ஆனந்தத்தால் அங்கமெல்லாம் விதிர்விதிர்த்து; உடலெங்கும் புளகமுற, உச்சி கூப்பிய கையினராய் அம்பிகை பாகத்து அண்ணலின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்குகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 325)
தம்பிரானார் எழுந்தருளத் தாங்கற்கரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்(று) அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பியாரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைகுவிய
அம்பிகாவல்லவர் செய்ய அடித்தாமரையின் கீழ்வீழ்ந்தார்

(4)
தியாகேசப் பெருமான் 'நம்பி, உனக்குற்ற குறை யாது?' என்று வினவியருள, நம்பிகளும், 'ஐயனே, ஒற்றியூரில் உம்முடைய அருளால் சங்கிலியை மணந்த செய்தியறிந்து, பரவை கடும் கோபத்தில் இருக்கின்றாள். 'யான் நேரில் சென்றால் உயிர் துறப்பேன்' என்றும் கூறுகின்றனளாம்'. 'இதற்கு யான் என் செய்வேன்' என்று முறையிடுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 327)
அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய
வடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம் செய்தணைந்த திறமெல்லாம்
கொடியேர் இடையாள் பரவைதான் அறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவேனென்று துணிந்திருந்தாள் என்னான் செய்வதென மொழிந்து

(5)
சுந்தரர் மேலும் தொடர்கிறார், 'ஐயனே, நீர் அடியேனுக்குத் தாயினும் நல்ல தோழரும், எமை ஆண்டு கொண்ட தலைவருமாக இருப்பவராகில், இன்றைய இரவுப் பொழுதிலேயே அடியேனின்பால் பரவை கொண்டுள்ள சீற்றத்தினைத் தணித்தருள்வீர்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 328)
நாயனீரே நான் உமக்கிங்(கு) அடியேனாகில் நீர்எனக்குத்
தாயினல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில்
ஆய அறிவும் இழந்தழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவைஉறு புலவி தீர்த்துத் தாரும்என

(குறிப்பு: அடிமைத் திறத்தோடு கூடிய தோழமை உரிமையால், இறைவருக்கே காலக்கெடு நிர்ணயிப்பதற்கு நம் நம்பிகளைத் தவிர்த்துப் பிறிதொருவரால் இயலுமோ?)

No comments:

Post a Comment