சேரமான் நாயனார் சுந்தரருடன், எண்ணிறந்த சேனைகளும் உடன்வர, மலைநாட்டிலுள்ள தம்முடைய அரசாட்சிப் பகுதியான கொடுங்களூரின் எல்லையை நெருங்குகின்றார். முன்னமே செய்தி அனுப்பியிருந்தமையால், 'தம்பிரான் தோழரை' மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ளும் திருப்பணியில் அப்பதி வாழ் அன்பர்கள் பெருமுனைப்புடன் ஈடுபடுகின்றனர். மதில் வாயில்கள்; விண்ணுயர் கோபுரங்கள்; மாளிகைகள்; சாலைகள்; இல்லங்ககள் தோறுமுள்ள வாயில் மற்றும் திண்ணைகள் என்று ஒருஇடம் மீதமில்லாமல் 'மலர் மாலைகள்; தோரணங்கள்; பாக்கு மரங்கள்' இவைகளால் வகைவகையாக அலங்கரித்து அணி செய்கின்றனர். ஆடலரங்குகள் தோறும் மகரக் குழையணிந்த மகளிர் சிவகீதம் பாடி ஆடியிருக்க அப்பகுதியே விழாக்கோலம் பூண்டு மிளிர்கின்றது.
பின் அனைவருமாய்ச் சென்று நாவலூர் அரசரையும், தங்கள் வேந்தரையும் எதிர்கொண்டு வரவேற்றுப் பெருமகிழ்வு கொள்கின்றனர். சேரர்கோன் நம்பிகள் பெருமானை முதலில் திருஅஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றார். வேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நம் சேரனார் பன்னெடுங்காலம் திருத்தொண்டு புரிந்து பரவிய திருக்கோயிலிது.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 146):
இறைவர் கோயில் மணிமுன்றில் வலங்கொண்டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்றாரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப் பரவிப் பெருமாளுடன் தொழுதார்
(சுந்தரர் தேவாரம்: திருஅஞ்சைக்களம் - திருப்பாடல் 1):
முடிப்பது கங்கையும் திங்களும், செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென்றெஞ்சுவன் திருக்கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லையோ எம்பிரானுக்கே!!
(குறிப்பு: சுந்தரனார் இத்திருப்பதிகப் பாடல்களில் 'அஞ்சைக்களம்' எனும் திருப்பெயரைக் குறிக்காதிருப்பினும், சேக்கிழார் பெருமானின் திருப்பாடல் வரிகள், இத்தலத்து இறைவரின் திருமுன்பே சுந்தரர் இப்பனுவலைப் பாடியுள்ளார் என்று ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றது. ஆதலின் இதனைப் பொதுத் திருப்பதிகம் என்று கருதாமல், திருஅஞ்சைக்களத் திருப்பதிகம் என்று கொள்வதே மரபு)
No comments:
Post a Comment