சுந்தரர் (பரவையாரை வேண்டி ஆரூர் இறைவரிடம் விண்ணப்பித்தல்)

சுந்தரர் திருவாரூர் திருக்கோயிலில் வன்மீகநாதப் பரம்பொருளை வழிபட்டு ஆலயத்தினின்றும் வெளிவருகையில், ஆலயத்துள் செல்லும் பரவையாரைக் கண்டு காதல் கொள்கின்றார். 

(1)
திருவுடைப் பரவையாரின் தோற்றப் பொலிவு குறித்து பலவாறு எண்ணி அதிசயித்து, பண்டைய வினைத் தொடர்பினால் எய்தியுள்ள காதல் உணர்வினால் கட்டுண்டு, 'எனை ஆளுடைய இறைவர்பால் சென்று இவளை வேண்டிப் பெறுவேன்' என்றெண்ணியவாறு, பரவையார் சந்திப்பினால் ஏற்பட்டிருந்த உள மகிழ்வுடன் மீளவும் ஆலயத்துள் செல்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 295) 
என்றினைய பலவு நினைந்(து) எம்பெருமான் அருள்வகையால் 
முன்தொடர்ந்து வரும்காதல் முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனை ஆட்கொண்டவர்பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான் கோயில்புக

(2)
சுந்தரனார் பூங்கோயில் எனும் திருக்கருவறையைச் சென்று சேர்வதற்குள், பரவையார் புற்றிடம் கொண்ட புராதனரை வழிபட்டுப் பிறிதொரு வாயிலின் வழியே சென்று விடுகின்றார். வன்தொண்டனார் மென்மேலும் பெருகிவரும் காதலுணர்வினால் உந்தப்பட்டு, ஆரூர் மேவும் அண்ணலாரிடம் பரவையாரைத் தந்தருளுமாறு வேண்டித் தொழுகின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 296) 
பரவையார் வலங்கொண்டு பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின் ஒருமருங்கு புறப்பட்டார்
விரவுபெரும் காதலினால் மெல்லியலார் தமைவேண்டி
அரவின் ஆரம்புனைந்தார் அடிபணிந்தார் ஆரூரர்

No comments:

Post a Comment