சுந்தரர் (குண்டையூரில் நெல்மலைகளைக் கண்டு அதிசயித்தல்):

(1)
குண்டையூர் கிழாரின் கனவில் கோளிலி இறைவர் 'சுந்தரன் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருள் புரிகின்றார். துயிலெழும் கிழார், குண்டையூரின் எல்லை வரையிலும் விண்ணளவிற்குக் குவிந்துள்ள நெல்மலைகளைக் கண்டு அதிசயம் அடைந்து, திருவருளின் திறம் போற்றி, இதற்கெல்லாம் காரணரான தம்பிரான் தோழரை அங்கிருந்தவாறே தொழுதெழுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 15):
அவ்விரவு புலர்காலை உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலை தான் இதுவென்றே அதிசயித்துச்
செவ்விய பொன்மலை வளைத்தார் திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுதெழுவார்

(2)
'இறைவரின் இந்த அருட்செயலை வன்தொண்டருக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் கிழார் திருவாரூர் நோக்கிச் செல்கின்றார். மற்றொரு புறம், நடந்தேறிய நிகழ்வுகளை இறைவர் சுந்தரருக்கு அறிவித்தருள, வன்தொண்டரும் இறைவரின் ஏவலால் குண்டையூருக்குப் பயணித்துச் செல்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 16):
நாவலூர் மன்னனார்க்கு நாயனார் அளித்த நெல்இங்கு 
யாவரால் எடுக்கலாகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யானென்று போந்தார், புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்

(3)
சுந்தரரை வழியிலேயே எதிர்கொள்ளும் கிழார் அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'பலகாலும் அடியேன் புரிந்து வந்த திருத்தொண்டிற்குத் தடை ஏற்பட, ஆதி மூர்த்தி நெல் மலைகளை அருளினார்' என்று விண்ணப்பித்துக் கொள்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 17):
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்கொண்டு, கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த பணியெனக்கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே நெல்மலை அளித்தார்என்று

(4)
சுந்தரனார் 'மதி சூடும் அண்ணலார் உமது தொண்டினால் திருவுள்ளம் உவந்தன்றோ அந்நெல் மலைகளை உமக்கு அருள் செய்துள்ளார்' என்று இனிய மொழிகளால் கிழாரைச் சிறப்பித்தவாறு, அவருடன் குண்டையூர் செல்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 18):
மனிதரால் எடுக்கும் எல்லைத்தன்று நெல்மலையின் ஆக்கம்
இனியெனால் செய்யலாகும் பணியன்றிது என்னக் கேட்டுப்
பனிமதி முடியாரன்றே பரிந்து உமக்களித்தார் நெல்லென்று 
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்

(5)
குண்டையூரில் குவிந்துள்ள நெல் மலைகளைக் கண்டு அதிசயிக்கும் சுந்தரனார், இவைகளைப் பரவையின் இல்லத்தில் சேர்க்க இறைவராலன்றிப் பிறிதொருவரால் ஆகாது என்று தெளிகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 19):
விண்ணினை அளக்கு நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும்எய்தி
எண்ணில்சீர்ப் பரவை இல்லத்து இந்நெல்லை எடுக்க ஆளும்
தண்ணிலவு அணிந்தார் தாமே தரிலன்றி ஒண்ணாதென்று

No comments:

Post a Comment