சுந்தரர் (பிக்ஷை பெற்றுப் பசி போக்கிய திருக்கச்சூர் இறைவர்):

சுந்தரர் கழுக்குன்றத்தினின்றும் புறப்பட்டுத் திருக்கச்சூர் எனும் தலத்தினைச் சென்றடைகின்றார், ஆலக்கோயில் எனும் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மலையடிக் கோயிலான மருந்தீஸ்வரர் ஆலயம் என்று இரு சிவாலயங்களை ஒரு தலமெனக் கொண்டு விளங்கும் திருத்தலமிது. முதலில் ஆலக்கோயிலையும் பின்னர் மருந்தீஸ்வர மூர்த்தியையும் தரிசித்தல் மரபு. 

வன்தொண்டனார் ஆலக்கோயில் பரம்பொருளைக் காதலோடு தரிசித்துப் போற்றிப் பின் திருக்கோயிலினின்றும் நீங்கி மதிற்புறத்திற்கு அருகில் வந்தமர்கின்றார். மதியப் பொழுது நெருங்கியமையாலும், வழக்கமாய் அமுது தயாரித்தளிக்கும் பரிசனங்கள் வரத் தாமதமானதாலும் நாவலூர் மன்னர் பசி வருத்தத்தினால் களைத்திருக்கின்றார். ஆலக்கோயிலுக்கருகிலுள்ள தம்பிரான் தோழரின் பசித் துன்பத்தினைப் போக்கியருள மலையடிக் கோயிலுறை மருந்தீஸ்வரப் பரம்பொருள் திருவுள்ளம் பற்றுகின்றாராம்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 176):
வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்தலையோடொழிந்து ஒருவெற்றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி அருள்கூரச் செப்புவார்

வேதியரொருவரின் திருவடிவில், திருக்கரங்களில் ஓடொன்றினை ஏந்திய திருக்கோலத்தில் நாவலூர் தலைவர் முன்பு எழுந்தருளி வரும் மலைக்கோயில் இறையனார் 'நீவீர் மிகவும் பசித்திருக்கின்றீர், உம் பசி வருத்தத்தை  மாற்றிட நாம் இப்பொழுதே சென்று சோறு இரந்து வருவோம், அது வரையிலும் இவ்விடத்திலேயே சற்று அமர்ந்திரும்' என்று அருளிச் செய்கின்றார். 

தெய்வங்களும் தொழுதேத்தும் ஆதிப் பரம்பொருள் சைவமுதற் தொண்டரான நம்பிகளின் பொருட்டு, அக்கடும் வெயிலில், திருமேனியில் திருநீறும்; திருமார்பில் ஒளி பொருந்திய முப்புரி நூலும்; கண்டவர் அகம் குழைந்துருகும் திருத்தோற்றமுமாய்த் தாமரை மலர் போலும் திருவடிகள் நிலத்தில் தோய, அங்குள்ள இல்லங்கள் தோறும் சென்று உணவினை பிக்ஷையாகப் பெற்று வன்தொண்டர் பால் மீள வந்து, 'இதனை உண்டு பசியினைப் போக்குவீர்' என்று தாயினும் சாலப் பரிவுடன் கூறி அருள் புரிகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 178):
வெண் திருநீற்றணி திகழ விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக் கடும்பகற்போது இடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல் பொருந்த மனைதொறும் புக்குக்
கொண்டுதாம் விரும்பிஆட்கொண்டவர்முன் கொடுவந்தார்

அந்தணரின் பேரருளைப் போற்றி வணங்கிச் சிவப்பிரசாதமான அவ்வுணவினைப் பெறுகின்றார் சுந்தரர் ('நிரந்த பெரும் காதலினால் நேர்தொழுது வாங்கினார்' என்பார் சேக்கிழார் அடிகள்). பின்னர் அத்திருவமுதினை உடனிருந்த மெய்த்தொண்டர் குழாத்தொடு பகிர்ந்துண்டுப் பெரு மகிழ்வுடன் வீற்றிருக்கையில் அருகிருந்த வேதியரைக் காணாது திகைக்கின்றார். பசி போக்கி அருளியது கண்ணுதற் கடவுளே என்றுணர்ந்து உருகுகின்றார். 

கண்ணருவி பெறுக, உடல் புளகமுற 'முதுவாய் ஓரி கதற' எனும் திருப்பதிகத்தினால், 'எழும் பிறவிகள் தோறும் அடியேனை ஆளாகக் கொண்டருளும் ஆலக்கோயில் பெருமானே!, 'கடும் வெம்மை சூழும் இவ்வுச்சிப் பொழுதில், சிலம்பொலிக்கும் பொன்னார்த் திருவடிகள் வருந்துமாறு இல்லங்கள் தோறும் இவ்விதம் பிக்ஷைக்குச் சென்றால், உன் திருவடிகளையே பற்றுக்கோடாய்க் கொண்டுள்ள அடியார்களின் உள்ளம் உருகாதோ பெருமானே' என்று உளமுருகிப் போற்றுகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருக்கச்சூர் - திருப்பாடல் 2)
கச்சேர் அரவொன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று 
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சைஅறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே

No comments:

Post a Comment