சுந்தரர் (நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்):

(1)
சுந்தரர், குண்டையூர் கிழாரும் உடன்வர, திருக்கோளிலி ஆலயத்துள் இறைவரின் திருமுன்பாகச் சென்று, அப்பகுதி முழுவதும் நிறைந்துள்ள நெல்மலைகளைத் திருவாரூரில் சேர்ப்பித்து அருளுமாறு விண்ணப்பித்துப் பாடுகின்றார்,

(திருக்கோளிலி - சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1)
நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே

(2)
கோளிலிப் பரம்பொருள் 'இன்றிரவு நம் பூதங்கள் இந்நெல் மலைகளை, இப்புவியில் சிறப்புற்று விளங்கும் திருவாரூரில் கொணர்ந்துக் குவிக்கும்' என்று விண்ணொலியாய் அறிவித்து அருள் புரிகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 21):
பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை அளவன்றி
மிகப்பெருகு நெல், உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்
புகப்பெய்து தருவனநம் பூதங்கள், என விசும்பில்
நிகர்ப்பரியதொரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால்

(3)
வன்தொண்டர் இறைவரின் பேரருட் திறத்தினை வியந்து போற்றி, நிலமிசை வீழ்ந்துப் பணிந்தெழுந்து, கிழாரிடம் விடைபெற்று, வழிதோறுமுள்ள சிவத்தலங்களைத் தரிசித்தவாறே திருவாரூரைச் சென்று சேர்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 22):
தம்பிரான் அருள்போற்றித் தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரால் உணர்வரிய திருப்பாதம் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப் பிறபதியும் தொழுதுபோய்
நம்பர்ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார் 

No comments:

Post a Comment