(1)
அப்பொழுது நள்ளிரவு வேளை. திருவாரூர் இறைவர் சுந்தரரின் தூதுவராய்ப் பரவையாரின் திருமாளிகைக்கு எழுந்தருளிச் செல்கின்றார். இறைவரின் முன்பாக சிவகணத்தவர்; யோகிகள்; தவமுனிவர்கள் ஆகியோர் செல்ல, தேவாசிரியன் மண்டபத்திலிருந்த தேவர்கள் யாவரும் தொழுதவாறு வர, திருநந்திதேவரும் குபேரனும் போற்றியவாறு உடன் செல்கின்றனர்.
(2)
பரவையாரின் திருமாளிகைக்குச் சற்று அருகாமையில், தியாகேசப் பரம்பொருள் உடன் வந்தோர் யாவரையும் (சூட்சும நிலையில்) புறத்தே நிற்குமாறு ஆணையிட்டு, சிவவேதியரின் திருவடிவு தாங்கி தனித்து முன்னேறிச் செல்கின்றார்.
(3)
வாயிலில் நின்றவாறு 'பரவையே, கதவினைத் திறப்பாய்' என்றருளிச் செய்கின்றார். சுந்தரரின் பிரிவுத் துயராலும்; அவர் மீதிருந்த கோபத்தினாலும் வாடித் துயிலின்றி இருந்த பரவையார் இறைவரின் குரல் கேட்டு, 'எமை ஆளுடைய இறைவரைப் பூசிக்கும் சிவவேதியர் ஒருவர் வந்துள்ளார் போலும்' என்றெண்ணுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 338)
சென்று மணிவாயிற் கதவம் செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றும் துயிலா(து) உணர்ந்தயர்வார் உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர் போலும் அழைத்தார் எனத்துணிந்து
(4)
'இந்நள்ளிரவு வேளையில் வருகின்றனரே' என்று சற்று பதைப்புடன் வெளிவந்து, வேதியரின் திருவடிகளைப் பணிந்து, 'அடியவளின் தலைவரான வீதிவிடங்கப் பெருமானைப் போன்று இவ்விடம் வருகை புரிந்துள்ளீர், எய்தியுள்ள்ள காரணம் யாதோ' என்று பணிவுடன் வினவுகிறார்.
(5)
மூலட்டான முதல்வர், 'பரவையே நம்பி இங்கு வருதற்கு நீ இசைதல் வேண்டும்' என்றருளிச் செய்ய, பரவையாரும் 'நன்றாக இருக்கின்றது உம்முடைய பெருமை' என்று சற்றே சீற்றத்துடன், இகழ்ச்சிக் குறிப்பு தோன்றுமாறு மறுமொழி புகல்கின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 342)
என் நினைந்(து) அணைந்த(து) என்பால் இன்னதென்றருளிச் செய்தால்
பின்னை அ(து) இயலுமாகில் ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி வர இங்கு வேண்டும் என்ன
நன்னுதலாரும் சால நன்றுநம் பெருமை என்பார்
(6)
'ஆ, பங்குனி உத்திர விழாவிற்கு இங்கு வருகை புரிந்த சில தினங்களிலேயே என்னைப் பிரிந்து சென்று, ஒற்றியூரில் சங்கிலியுடன் தொடர்பு கொண்ட அவருக்கு இங்கு மீண்டு வர உரிமையும் உண்டோ? இந்நிள்ளிரவு வேளையில் எய்தியுள்ள தம்முடைய கூற்று மிகவும் நன்று' என்று வெகுள்கின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 343)
பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவாராகி
இங்கெனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்குண்டாருக்(கு) இங்கொரு சார்வுண்டோ; நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிதென்றார்
(7)
வேதியரான பரம்பொருளும், 'நங்கையே, அவனுடைய குற்றங்களை மனதில் கொள்ளாதே! கொண்ட கோபம் ஒழிந்து உன் துன்ப நிலையினின்றும் வெளிவருவாய். உன்னை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்' என்று மறைகளும் காண்பதற்கரிய ஆதிமுதல்வர் இறைஞ்சுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 344)
நாதரும் அதனைக் கேட்டு நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா(து) எய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற்கன்றோ நுன்னை யான் வேண்டிக் கொண்ட(து)
ஆதலின் மறுத்தல் செய்ய அடாதென அருளிச் செய்தார்
(8 )
பரவையார் ஆற்றாமை தணியாதவராய், 'இவ்வேளையில் அவர் பொருட்டு வருதல் உம்முடைய பெருமைக்கு ஏற்றதன்று. சங்கிலியைப் பிரியேன் - என்று உறுதி அளிக்கவும் துணிந்த அவர் இங்கு வருதற்கு ஒருபொழுதும் இசையேன். இங்கிருந்து சென்று விடுங்கள்' என்று மறுத்துரைத்து மீளவும் இல்லத்துள் செல்கின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 345)
அருமறை முனிவரான ஐயரைத் தையலார் தாம்
கருமம் ஈதாக நீர் கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவதன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்(கு) இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார்

No comments:
Post a Comment