சுந்தரரின் திருத்துணைவியாரான பரவையார் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளன்று, எண்ணிறந்த அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் அவர்கட்கு வேண்டுவன அளித்தலாகிய நியமத்தினைப் பூண்டிருந்தார். அந்நிகழ்விற்குப் பொன் வேண்டிப் பெறுதற் பொருட்டு, அடியவர்களும் உடன்வரத் திருப்புகலூர் தலத்திற்குச் செல்கின்றார் வன்தொண்டனார் (குறிப்பு: இது பரவையார் கேள்வரின் 2வது புகலூர் யாத்திரை, 'முதன்முதலில் திருவாரூருக்கு வருகை புரியும் முன்னரே சுந்தரர் புகலூரைத் தரிசித்துள்ள நிகழ்வினை' திருமலைச் சருக்கத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்).
ஆலயத்துள் புகுந்து; திருச்சன்னிதியினை வலம் வந்து அருவுருவத்தில் எழுந்தருளியுள்ள அக்னிபுரீஸ்வரப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்துத் திருமுன்பு வீழ்ந்து பணிகின்றார். இதுகாறும் வழியடிமைத் தொண்டு புரிந்து வந்திருந்த தன்மையினால் எழுந்த அதீத காதலன்பில் மூழ்கித் திளைக்கின்றார், பொன் வேண்டும் குறிப்புடன் பாமாலையொன்றினால் போற்றிப் பரவுகின்றார் (இத்திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை),
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 47):
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்தெழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்
இறைவரிடமிருந்து குறிப்பேதும் தோன்றாமையால் வன்தொண்டனார் கருவறையினின்றும் நீங்கி, உடன்வந்த அடியவர்களுடன் திருமடம் செல்லாது; ஆலய முன்றிலைச் சென்றடைகின்றார். அச்சமயத்தில் திருவருட் செயலால் தம்பிரான் தோழரின் மலர்க்கண்களில் துயில் பொருந்தி நிற்க, அங்கேயே சிறிது ஓய்வு கொள்ள முனைகின்றார். திருப்பணிக்கென அடுக்கியிருந்த செங்கற்கள் சிலவற்றை எடுத்து, அதன் மீது பட்டால்ஆன தன் மேலாடையை விரித்துத் துயில் கொள்கின்றார்.
சுற்றுமிருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளிஉணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்
பொன்திண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி.
'தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்' எனும் திருப்பதிகத்தினால் புகலூர் மேவும் புண்ணியரின் பேரருட் திறத்தினைப் போற்றிப் பரவுகின்றார்,
(சுந்தரர் தேவாரம்: முதல் திருப்பாடல்):
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே; எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும்; சோறும் கூறையும் ஏத்தலாம்; இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
No comments:
Post a Comment