சுந்தரர் (வலக்கண் பார்வையை வேண்டி மன்றாடுதல் - வெகுண்டு பாடுதல்):

(1)
சுந்தரர், வலக்கண் பார்வையை வேண்டிப் பெறும் குறிப்புடன், அர்த்த ஜாம பூஜை வேளையில் திருவாரூர் ஆலயத்துள் செல்கின்றார். தேவாசிரியன் மண்டபத்தினைத் தொழுதுப் 'பூங்கோயில்' எனும் திருக்கருவறையைச் சென்று சேர்கின்றார். அளவிடற்கரிய காதலால் நிலமிசை வீழ்ந்து பணிகின்றார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 306)
சீர்பெருகுந் திருத்தேவா சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில் தனை வணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காதலால் அவனி மேல்வீழ்ந்தார்

(2)
வணங்கி எழுந்து, மூலட்டானப் பரம்பொருளின் திருமுன்பாக நின்று விம்மியழுகின்றார். இறைவரின் திருக்கோல அழகினைக் கண்ணொன்றினால் பருகித் திளைக்க இயலாது அயர்ந்து, 'உம்முடைய திருவுள்ளம் இன்னமும் கனியவில்லையா ஐயனே?, அடியேனுக்குக் கண்ணினை அளித்தருள்வாய்' என்று கசிந்துருகி விண்ணப்பிக்கின்றார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 307)
வீழ்ந்தெழுந்து கைதொழுது முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால் ஆராமல் மனம்அழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடை நின்றடியேனை எடுத்தருளித்
தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்

(3)
இறைவரின் மௌனத்தால் மெதுமெதுவே பொறுமையின் விளிம்பிற்குச் செல்கின்றார் வன்தொண்டனார். 'ஐயனே, உம்மைத் தரிசிக்காதிருப்பது இயலாதவொன்று என்று உணர்ந்தன்றோ, ஒற்றியூரில் மகிழின் கீழ் எழுந்தருளியிருக்க வேண்டினேன்? அதனை நீர் சங்கிலிக்கு அறிவித்த தன்மையினாலன்றோ இந்நிலை வந்தெய்தியது?. சரி, அடியேன் புரிந்தது குற்றமேயெனினும் அதன் பொருட்டு இதுவரை நுகர்ந்துள்ள துன்பங்கள் போதாதோ?, குற்றம் பொறுத்தருள்வது உன் பண்பன்றோ பெருமானே?, என்று பலப்பல கூறி முறையிட்டு மன்றாடுகின்றார்.

(4)
இறைவர் அந்நிலையிலும் அருளாதிருக்கப் பெரிதும் வெகுண்டு, 'உம்முடைய திருவடிக்கே அடிமை பூண்டு, உம்மைத் தவிர்த்துப் பிறிதொருவரிடம் யாதொன்றையும் வேண்டாத அடியவர்கள், தங்கள் உள்ளத்தை வருத்தும் துன்பத்தினால் வாட்டமுற்றுக் கதியற்ற நிலையில் உம்முடைய திருமுன்னர் முறையிட்டு நிற்கையில், அவர்களுக்கு அருளேதும் புரியாமல் இவ்விதம் தவிக்க விடுவது தான் உம்முடைய திருவுள்ளமெனில் நீர் மட்டும் நன்றாக வாழ்ந்திருப்பீர்' என்று வெந்து நொந்து பாடுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர் - திருப்பாடல் 1)
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

(5)
9ஆம் திருப்பாடலில் 'வாய்தான் திறவீர்' என்று வெகுள்கின்றார். இறுதித் திருப்பாடலில், அடியேன் இவ்வளவு கதறியும்; முறையிட்டும்  நீர் அருளாதிருந்தால் அப்பழி முழுமையும் உம்மையே சாரும். இனி நீர் மட்டும் நன்றாக வாழ்ந்திருப்பீர்' என்று இறைவரிடத்து உள்ள உரிமையன்பினால் நிர்ப்பந்தித்து வேண்டுகின்றார்.

No comments:

Post a Comment