சுந்தரர் திருவல்லத்திலிருந்து புறப்பட்டு வழிதோறுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் போற்றியவாறே திருக்காளத்தி மலையினை வந்தடைகின்றார். கண்ணப்ப நாயனார் பேரருள் பெற்றுள்ள அப்பரம புண்ணிய மலையினைத் தரிசித்த கணத்திலேயே நிலத்தில் உடல் தோய வீழ்ந்துப் பணிகின்றார். பின்னர் திருவருள் கூடிவர, மலை மீதேறிச் சென்று காளத்தியுறைப் பரம்பொருளைப் பல்கிப் பெருகும் காதலோடுத் தரிசித்துப் பணிந்து, 'செண்டாடும் விடையாய்' எனும் திருப்பதிகத்தினால் போற்றிப் பரவுகின்றார்,
தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்றருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால்ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி மலைமேல் மருந்தை வணங்கினார்
(சுந்தரர் தேவாரம்: திருக்காளத்தி - திருப்பாடல் 1)
செண்டாடும் விடையாய் சிவனேஎன் செழுஞ்சுடரே
வண்டாரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன்எம் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
பின்னர் கருவறைக்குள், சிவலிங்கத் திருமேனிக்கு அருகாக வலப்புறத்தில், கூப்பிய கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில், மெய்யன்பு ஒரு திருவடிவம் கொண்டாற் போல் ஆச்சரியமாய் எழுந்தருளியுள்ள கண்ணப்ப நாயனாரின் திருவடி மலர்களைப் பணிந்துப் பெறற்கரிய பேற்றினைப் பெற்று மகிழ்கின்றார் ('கண்ணப்பர் மணங்கொள் மலர்ச்சேவடி பணிந்து வாழ்ந்து போந்து' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). மிக மிக மிக முக்கியமான தரிசனமிது, கருவறைப் பிரகாரத்திற்குள் சென்றால் மட்டுமே கண்ணப்பரின் இத்திருக்கோல தரிசனம் கிட்டும், பொதுவில் வெளிநின்று தரிசிப்போர் சுவாமியின் திருக்கோலத்தினை மட்டுமே தரிசிக்கப் பெறுவர்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 197):
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரஇசை
அணங்கு செண்டாடெனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி
இணங்கு தொண்டருடன் கெழுமி இன்புற்றிருக்கும் அந்நாளில்
(குறிப்பு: ஆலய வளாகத்தினின்றும் வெளிப்பட்டு மற்றொரு பாதை வழியாகச் சிறு குன்றொன்றின் உச்சிக்கு இட்டுச் செல்லும் படிகளிலேறிச் சென்றால், கண்ணப்ப நாயனார் தன் திருக்கண்களை அகழ்ந்தெடுத்துப் பேரருள் பெற்ற அற்புதப் பகுதியினை அடையலாம், இங்குள்ள சிவலிங்கத் திருமேனிக்கென்று சிறிய திருக்கோயிலொன்றும் புதுக்கப் பெற்றுள்ளது).
No comments:
Post a Comment