சுந்தரர் (அகக் கண்களால் கேதார; ஸ்ரீசைல தரிசனம்):

சுந்தரர் திருக்காளத்தியிலிருந்த நிலையிலேயே வடதிசையிலுள்ள திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மற்றும் திருக்கேதாரத் தலங்களை அகக் கண்களால் தரிசித்துத் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார். இவ்விரு தலங்களில் எழுந்தருளியுள்ள சிவ மூர்த்தியை நேரில் தரிசித்தாற் போன்ற மெய்யுணர்வு திருவருளால் எய்தப் பெற்றுச் சிவானந்தம் கொள்கின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 198):
வடமாதிரத்துப் பருப்பதமும் திருக்கேதார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த எல்லாம் இங்கே இருந்திறைஞ்சி
நடமாடிய சேவடியாரை நண்ணினார் போல் உள்நிறைந்து
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடிக் காதல் சிறந்திருந்தார்

திருக்கேதாரத் திருப்பதிகத்தில், இவ்வுலக வாழ்வின் நிலையாமையைக் குறிப்பிட்டு, வினைப்பயனால் எய்தியுள்ள இம்மானிடப் பிறவியின் வாழ்நாளை நொடிப் பொழுதும் வீணாக்காமல், பிறவாப் பெருநிலையைத் திருவருளால் பெற முனைவதில் மட்டுமே நம் கவனம் முழுமையும் இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

முதல் திருப்பாடலில் 'இவ்வுலக வாழ்வு ஒரு நாள் மண்ணாவது திண்ணம், ஆதலின் பிற உயிர்களுக்கு உதவுவதான அறச் செயல்களை ஒருசிறிதும் காலம் தாழ்த்தாது புரியத் துவங்குங்கள்' என்று அறிவுறுத்துகின்றார்,  

(சுந்தரர் தேவாரம்: திருக்கேதாரம் - திருப்பாடல் 1)
வாழ்வாவது மாயம்இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்
தாழாதுஅறம் செய்ம்மின் தடங்கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான் திருக்கேதாரம் எனீரே

4ஆம் திருப்பாடலில், இப்பிறவி நோயைப் போக்க முயலாது, உண்பதும்; ஐம்புலன்களால் இன்பம் துய்த்து மகிழ்வதுமே வாழ்க்கையின் பயன் என்று உழல்வோரையும், அறச் செயல்களைப் புரியாமல் பொருள் சேர்ப்பதிலேயே குறியாயிருந்துப் பின் அவற்றையும் இழந்து அவமே மரணிக்கும் மடமையையும் கடுமையாய்ச் சாடுகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருக்கேதாரம் - திருப்பாடல் 4)
உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்து இழப்பார்களும் சிலர்கள்
வழக்கேயெனில் பிழைக்கேம் என்பர் மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
கிழக்கே சலமிடுவார் தொழு கேதாரம் எனீரே

6ஆம் திருப்பாடலில், புண்ணிய நதிகளில் நீராடுதல் மற்றும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தரிசித்தல் ஆகியவற்றின் அவசியத்தினை வலியுறுத்தி அவற்றின் மூலம் பாவ நீக்கம், சித்தத் தெளிவு மற்றும் நற்பலன்கள் யாவையும் பெறலாம் என்று உறுதி கூறுகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருக்கேதாரம் - திருப்பாடல் 6)
தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறிலன்றே
குளியீர்உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண் கேதாரம் எனீரே

இறுதித் திருப்பாடலில், 'திருநாவுக்கரசர்; திருஞானசம்பந்தர் மற்றுமுள்ள சிவனடியார் அனைவரின் அடியார்களுக்கும் அடித்தொண்டன் நம்பியாரூரன்' என்று நெகிழ்வுடன் தன்னைக் குறித்துக் கொள்கின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருக்கேதாரம் - திருப்பாடல் 10)
நாவின்மிசை அரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்உரை செய்த
பாவின்தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே

No comments:

Post a Comment