சுந்தரர் திருவானைக்காவைத் தொழுத பின்னர் திருப்பாச்சிலாச்சிரமம் எனும் தலத்தினைச் சென்றடைகின்றார். ஆலயத்தினை வலமாய் வணங்கி உட்சென்று பாச்சிலாச்சிரம இறைவரின் திருமுன்பு சென்று காதலுடன் பணிகின்றார், திருப்புகலூரில் முன்னர் வேண்டியது போலவே இவ்விடத்தும் பொன் வேண்டி விண்ணப்பிக்க, பிறைமதிப் பரம்பொருளோ பொருளேதும் அருளாதவராய்த் திருவிளையாடல் புரிகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 79):
சென்று திருக்கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல் நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள் அருளாதொழிய நேர்நின்று.
மாறா அன்பும்; பொருள் பெறாத ஆற்றாமையும் ஒருசேர உள்ளத்திலெழத் தோழர் எனும் உரிமைப்பாட்டினால் உள்ளம் புழுங்கி, எலும்பும் கரைந்துருகுமாறு அங்குக் குழுமியிருந்த திருத்தொண்டர்களிடம் முறையிடும் பான்மையில் 'இவரலாது இல்லையோ பிரானார்' என்று திருப்பதிகம் பாடுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 80):
அன்பு நீங்கா அச்சமுடனடுத்த திருத்தோழமைப் பணியால்
பொன்பெறாத திருவுள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடுடையார் போல்
என்பு கரைந்து பிரானார் மற்றிலையோ என்ன எடுக்கின்றார்.
'இப்பிறப்பு மட்டுமின்றி எழும் பிறவிகள் தோறும் வழித்தொண்டு புரிவேன்' என்று இறைவரிடம் முதலில் உறுதி கூறி விண்ணப்பித்துப் பின், இறையவர் ஒரு பித்தரே ஆகிலும்; தன்னை ஒரு பொருளாகக் கொள்ளாராயினும்; இப்பிறப்பில் அருளாது மறுமையில் மட்டுமே அருள்வாராகிலும்; பரிந்து ஒரு வார்த்தை பேசாராகிலும்; பொருளேதும் ஈயாராகிலும்; யாவர்க்கும் அருள் செய்துத் தனக்கு மட்டும் அருளாது போவாராகிலும்; யாவும் தருவதாகக் கூறி மெய்யர் போல் ஆட்கொண்டுப் பின் எதுவொன்றும் அருளாது பொய்யராய்ப் போவாராகிலும்; அரவம் சூடும் பண்பினர் ஆகிலும்; இடுகாட்டில் ஆடும் தன்மையர் ஆயினும்; எண்ணிறந்த முறை குறை கூறி முறையிட்டாலும் பிழை பொறுக்காது போவாராயினும், இவரன்றி அடியவனைப் பேணும் தலைவர் பிறிதொருவர் உளரோ? இல்லையென்றே உரைப்பேன்' என்று போற்றிப் பரவுகின்றார்.
(சுந்தரர் தேவாரம்: திருப்பாச்சிலாச்சிரமம் - திருப்பாடல் 1):
வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் நெஞ்சமும் வஞ்சம்ஒன்றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பார்த்தோர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார்!!!
'ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல' எனும் இறுதித் திருப்பாடல் வரி மூலம் 'இத்திருப்பாடல்களை ஏசும் பொருட்டோ; இகழும் பொருட்டோ பாடவில்லை' என்று தெளிவுறுத்துகின்றார். பாச்சிலாச்சிரமத்து இறைவர் சுந்தரனாரின் திருப்பாடல்களால் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பொற்குவைகளை அளித்து அருள் புரியத் தம்பிரான் தோழரும் அகமிக மகிழ்ந்துத் திருவருள் திறத்தினை வியந்து போற்றிப் பணிகின்றார்.
No comments:
Post a Comment