சுந்தரர் திருக்கச்சூரிலிருந்து புறப்பட்டு வழிதோறுமுள்ள சிவத்தலங்களை தரிசித்துப் போற்றியவாறே காஞ்சீபுர ஷேத்திரத்தினைச் சென்றடைகின்றார். அப்பதி வாழ் அன்பர்கள் 'வேத முதல்வர் ஆவணம் காட்டி ஆட்கொண்ட ஆளுடைய நம்பிகள் வருகை புரியும் பெறற்கரிய பேற்றினை இன்று பெற்றோம்' என்று அகமிக மகிழ்கின்றனர். திருவீதிகளெங்கும் தோரணங்களால் அணிசெய்து, இல்லங்களில் திருவிளக்கேற்றி, நிறைகுடங்கள் விளங்குமாறு தம்பிரான் தோழரை எல்லையில் எதிர்கொண்டு வரவேற்றுப் பணிகின்றனர், வன்தொண்டரும் எதிர்வணங்கி அவர்களுடன் காஞ்சி மாநகருக்குள் செல்கின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 186):
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோபுரம் கடந்து நிறைமாளிகை வீதியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனைமங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திருஏகாம்பரம் சென்றெய்தினார்
ஏகம்பத் திருக்கோயிலை அணைந்து ஆலய கோபுரத்தினை வீழ்ந்து வணங்கி உட்புகுந்து, வழிதோறுமுள்ள திருச்சன்னிதிகளை வணங்கியவாறே உச்சி கூப்பிய கையினராய்த் திருக்கருவறையினை அடைகின்றார். கம்பையாறு பெருகி வரத் தாம் பூசித்து வரும் சிவலிங்கத் திருமேனிக்கு ஊறு நேர்ந்து விடுமோ என்றஞ்சி ஆறத் தழுவி அம்மெய்யன்பினால் பேரருள் பெற்று அம்மூர்த்தியுடன் ஒன்றிக் கலந்திருந்த ஏலவார்க்குழலி அம்மை பணிந்தேத்தும் ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளைக் காதலுடன் வீழ்ந்துப் பணிகின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 188):
கைகள் கூப்பி முன்அணைவார் கம்பையாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையுலாவும் கருநெடுங்கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்
உடன் எழுந்து மறை முதல்வரைப் போற்றி செய்து, ஆனந்த நெகிழ்வினால் விம்மி அழுதுத் தன்வயமற்று, மென்மேலும் பெருகும் காதலொடுத் திருப்பதிகத்தினால் போற்றிப் பரவுகின்றார் (இச்சமயம் பாடிய திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை). பின் மாறாத விருப்பத்துடன் அவ்விடத்தினின்றும் நீங்கி, அத்தலத்திலுள்ள இன்ன பிற திருக்கோயில்களையும் தரிசித்துப் பரவும் பொருட்டு அப்பதியில் சிறிது காலம் தங்கியிருக்கின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 189):
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மியெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தையுடன் பாடி மாறா விருப்பில் புறம்போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்
பின்னர் காமக் கோட்டத்தில் காமாட்சியன்னையைத் தரிசித்து இறைஞ்சிப் பின் கச்சி மேற்றளி எனும் தலத்தினைத் தொழுதேத்துகின்றார். பின் ஓணகாந்தன்தளியில், தோழமையோடு கூடிய அடிமைத் திறத்தினால் பொன் வேண்டிப் பாட, அத்தலத்துறை இறைவரின் திருவருளால் பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்று மகிழ்கின்றார். இதன் தொடர்ச்சியாய் அனேகதங்காவதம்; பனங்காட்டூர்; திருமால்பேறு முதலிய திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருக்காளத்தி மலையினைச் சென்றடைகின்றார்.
No comments:
Post a Comment