சுந்தரர் (பூத கணங்கள் திருவாரூரில் நெல்மலைகளைக் குவித்தல்):

(1)
திருவாரூர் இறைவரின் திருவருள் ஏவலால், அன்றைய இரவுப் பொழுதில் சிவபூத கணங்கள் குண்டையூரிலிருந்த விண்ணளவு நெல் மலைகளைக் கொணர்ந்து, முதற்கண் பரவையார் திருமாளிகையை நிறைவித்துப் பின்னர் திருவாரூர் முழுவதுமாய் நிறையுமாறு குவிக்கின்றன, 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 25):
குண்டையூர் நெல்மலையைக் குறள் பூதப்படை கவர்ந்து
வண்டுலாம் குழற்பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர் அடங்கவும் நெல் மலையாக்கிக்
கண்டவர் அற்புதமெய்தும் காட்சிபெற அமைத்தனவால்

(2)
பொழுது புலர்கையில், ஆரூர்வாழ் மக்கள் அப்பகுதி முழுவதும் குவிந்திருந்த நெல்மலைகளைக் கண்டு அதிசயித்து, 'இது தொண்டிற் சிறந்த பரவையாருக்கு இவ்வையம் வாழ வந்துதித்த நம்பியாரூரர் அளித்த பெருஞ்செல்வமன்றோ' என்று வியந்து போற்றுகின்றனர்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 26):
அவ்விரவு புலர்காலை ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல்மலையிவை என்றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின் நங்கைபுகழ்ப் பரவையார்க்கு 
இவ்வுலகு வாழவரு நம்பிஅளித்தன என்பார்

(3)
கணவரான வன்தொண்டனார் தமக்களித்த நெல்மலைகளைக் கண்டு பெருமகிழ்வுறும் பரவைப் பிராட்டியார், 'அவரவர் இல்லங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறைந்துள்ள நெற்குன்றுகளை அவரவர் இல்லத்திற்கு உரிமையாக்கிக் கொள்க' என்று முரசறிவிக்கச் செய்கின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 28):
வன்தொண்டர் தமக்களித்த நெல்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனைஎல்லைக்கு உட்படு நெற்குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்கஎன
வென்றி முரசறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்

(4)
பறையின் அறிவிப்பைக் கேட்டு ஆரூர் வாழ் அன்பர்கள் பெருமகிழ்வுற்றுப் பரவையாரையும் தம்பிரான் தோழரையும் போற்றுகின்றனர். பரவைப் பிராட்டியார் இச்சிறப்புகள் அனைத்திற்கும் காரணரான நம்பிகள் பெருமானாரைப் பணிகின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 29):
அணியாரூர் மறுகதனில் ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமல் கட்டிநகர் களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார்.

No comments:

Post a Comment