சுந்தரர் (சேரமான் நாயனாரும் உடன் வர, திருக்கயிலைக்கொரு அற்புத யாத்திரை):

சிவபெருமானின் ஆணையால், சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வர, நான்முகன் மற்றும் இந்திரன்  உள்ளிட்ட தேவர்கள் யாவரும் அயிராவணம் எனும் வெள்ளை யானையுடன் செல்ல, உடன் வைகுந்த வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவும் எழுந்தருளி வர, திருஅஞ்சைக்களம் சென்று சுந்தரரிடம் இறைவரின் ஆணையினைத் தெரிவிக்கின்றனர். 

அவ்வாணையைப் பணிந்து ஏற்கும் சுந்தரனாரைத் தேவர்கள் வலமாய் வந்து வணங்குகின்றனர். பின்னர் விண்ணவர் கற்பக மலர்களைத் தூவிப் போற்ற, ஐவகை தேவ துந்துபிகள் பெரும் ஓசையுடன் முழங்க, அஷ்ட லக்ஷ்மி நாயகரான ஸ்ரீமன் நாராயணர் திருவுள்ளம் மகிழ்ந்து வாழ்த்த, நான்முகக் கடவுள் மற்றும் இந்திரன் உள்ளிட்ட எண்ணிறந்த தேவர்கள் போற்ற, வன்தொண்டர் தன் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரைத் திருவுள்ளத்தில் எண்ணியவாறே அயிராவணத்தில் ஆரோகணிக்கின்றார் ('பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்' என்றிதனைப் பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார்), ஆதலின் 'சேரனாரும் உடன் வருதல் வேண்டும்' என்பதே நம்பிகளின் திருவுள்ளக் குறிப்பாக இருந்துள்ளது. 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 34):
ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையில் எதிர்வலம் கொண்டேற்ற
நாற்றடங்கடல் முழுக்கென ஐவகை நாதம் மீதெழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடுசார்ந்தார்.
சுந்தரர் திருக்கயிலைக்கு மீள இருப்பதைத் திருவருட் குறிப்பினால் அறியப் பெறும் சேரமான் நாயனார் அரண்மனையிலிருந்து புரவியொன்றின் மீது காற்றினும் கடிய வேகத்தில் அஞ்சைக்களம் வந்து சேர, விண்ணில் மெய்த் தொண்டரான சுந்தரனார் அயிராவணத்தில் ஆரோகணித்துச் செல்வதைக் காண்கின்றார். கணநேரமும் சுந்தரரின் பிரிவைத் தரிக்கவொண்ணாத சேரனார் குதிரையை விரைந்து செலுத்தியவாறே, சுந்தரருடன் திருக்கயிலைக்கு உடன்செல்லும் குறிப்புடன் அப்புரவியின் செவியினில் ஸ்ரீபஞ்சாக்ஷர மந்திரத்தினை ஓதுகின்றார். 
வெள்ளை யானையில் ஆரோகணிக்கையில் சேரமான் நாயனாரை நினைந்திருந்த சுந்தரரின் சங்கல்ப சக்தியாலும், சுந்தரனாருக்குச் சேரனார் புரிந்திருந்த மாகேஸ்வர பூஜைகளின் நற்பயனாகவும், பலகாலும் பாராயணம் புரிந்து சித்தி பெற்றிருந்த திருஐந்தெழுத்தின் மேன்மையினாலும் அப்புரவி மேலெழும்பி விண்ணில் விரைந்து, சுந்தரனாரின் வெள்ளை யானையை வலமாய்ச் சென்று பின்னர் முன்னாகப் பயணித்துச் செல்கின்றது.  

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 36):
விட்ட வெம்பரிச் செவியினில் புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்டமாம் சிவமந்திரம் ஓதலின் இரு விசும்பெழப் பாய்ந்து
மட்டலர்ந்த பைந்தெரியல் வன்தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக
சேரர்கோனைத் தொடர்ந்து வந்திருந்த படை வீரர்கள் தங்கள் மன்னவனார் விண்மிசை செல்வதைக் கண்டு நெகிழ்ந்துருகி, 'இனியொருக்கணமும் நம் வேந்தரைப் பிரிந்து வாழோம்' என்று உடைவாளால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர், நெகிழ்ச்சியான தருணமிது. 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 37):
உதியர் மன்னவர் தம்பெரும் சேனையின் உடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத் தங்கண் புலப்படுமெல்லை
எதிர் விசும்பில் கண்டுபின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருகிய சுரிகையான் முறைமுறை உடல்வீழ்த்தார்

சேரனாரின் திருவடிகளுக்கு தொண்டு புரிந்துள்ள சீர்மையினால், தங்கள் வேந்தருக்கும் முன்னதாக அப்படை வீரர்கள் திருக்கயிலைப் பதம் பெற்று, சேரனாருக்குச் சேவை புரியும் பொருட்டுக் காத்திருக்கின்றனர் என்று தெய்வச் சேக்கிழார் அற்புதமாய்ப் பதிவு செய்கின்றார். என்னே வியப்பு!

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 38):
வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய் வில்லவர் பெருமானைச்
சார முன்சென்று சேவகம் ஏற்றனர் தனித்தொண்டர் மேல்கொண்ட
வாரும் மும்மதத்தருவி வெள்ளானைக்கு வயப்பரி முன்வைத்துச்
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசைநோக்கி

No comments:

Post a Comment