சுந்தரர் (மலைநாட்டில் மீண்டுமொரு நெகிழ்விக்கும் வரவேற்பு):

சுந்தரர், திருவாரூரிலிருந்து புறப்பட்டு நெடுந்தூரம் பயணித்து, அவிநாசியில் முதலை விழுங்கிய பாலகனொருவனைத் திருவருளால் மீண்டெழச் செய்து, இறுதியாய் கொடுங்களூரின் எல்லையை அடைகின்றார். வன்தொண்டரின் வருகை குறித்து அப்பதி வாழும் அரனடியார்கள் விரைந்து சென்று சேரமான் நாயனாரிடம் தெரிவிக்க, அவர்கள் யாவருக்கும் பொற்கிழி; அணிகள்; நல்லாடைகள் இவைகளை மிகுதியாக அளித்து மகிழ்கின்றார் சேரனார். 

மகிழ்ச்சியின் மேலீட்டினால் செயலொன்றும் அறியாதவராய், 'என் ஐயன் வருகின்றார், எனையாளும் அண்ணல் வருகின்றார், ஆரூரின் சைவப் பெருமகனார் வருகின்றார், என்னுயிர்த் துணையான தலைவர் வருகின்றார், இவ்வுலகெலாம் உய்யுமாறு தம்பிரான் தோழர் வருகின்றார்' என்று நெகிழ்வுடன் போற்றி செய்து, இவ்வினிய செய்தியை நகரெங்கும் முரசறைந்து அறிவிக்குமாறு செய்கின்றார்.  

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 17):
செய்வதொன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் 

நகரெங்கும் அலங்கரிக்கச் செய்து, அமைச்சர்களும் உடன்வர, யானையொன்றின் மீது ஆரோகணித்து நம்பியாரூரை எதிர்கொள்ள விரைகின்றார். எல்லையில் எழுந்தருளி வரும் நாவலூர் மன்னரை எதிர்கொண்டு, அன்றலர்ந்த தாமரை போலும் அவர்தம் திருவடி மலர்களைப் பணிகின்றார் சேரனார். சுந்தரரும் எதிர்தொழுது சேரமான் நாயனாரைப் காதலுடன் ஆலிங்கனம் புரிகின்றார். இருவரின் திருமேனிகள் வேறாயினும் ஒன்றெனவே கருத்துமாற் போல, ஒருமையுற்ற நட்புணர்வினால் ஒன்றிக் கலந்திருக்கின்றனர். சேரனார் கண்ணருவி பாய நெகிழ்வுடன் சுந்தரனாரை நலம் விசாரித்து உள்ளம் உவக்கின்றார், 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 20):
சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும்காதலில் தொழுது முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்.

இவ்விரு திருத்தொண்டர்களின் உத்தமமான நட்பின் திறத்தினைக் கண்ணுறும் அப்பதி வாழ் மக்கள் பெருமகிழ்வுடன் ஆர்ப்பரிக்கின்றனர். பின்னர் சேரர் பெருமான் 'தமிழின் பெருமாளான' சுந்தரனாரை யானை மீது ஆரோகணிக்கச் செய்து, தாமும் பின்னாக அமர்ந்து வன்தொண்டருக்கு வெண்கொற்றக் குடையினை ஏந்திச் செல்கின்றார், 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 21):
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடின்றி உயர்காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசையேற்றித் தாம்பின் மதிவெண்குடை கவித்தார் 

சேரனாரின் பெரும் படைகள் கடல் போலும் ஒலியெழுப்ப, இருமருங்கிலுமுள்ள சிவனடியார்கள் கங்கையாற்றின் பெருமுழக்கம் போன்று 'ஹர ஹர' எனும் சிவகோஷத்தால் ஆர்ப்பரிக்க, அமைச்சர்கள் வணங்கிப் போற்றிய நிலையில் உடன்வர, அந்தணர்கள் மறைமொழிகளை முழங்கியவாறு திருவீதிகளில் குணலைக் கூத்தாட, முரசொலிகள் எங்கும் பல்கிப் பெருக, சிவச்செல்வியரான மகளிர் திருவீதிகளில் ஆடிப் பாடி மகிழ, பெரும் சிறப்புடன் அரண்மனையைச் சென்றடைகின்றனர். 

சேரமான் நாயனார் சுந்தரனாரை மணியாசனத்தில் அமர்வித்து, சொற்களால் விவரிக்கவொண்ணாத பெரும் சிறப்புடைய பூசனைகள் பல புரிந்து வணங்குகின்றார் ('உரிமைநல் வினைகள் புரிந்தன உரைமுடிவில என முன்செய்து').

No comments:

Post a Comment