சுந்தரனார் காவிரியின் தென்கரையிலுள்ள கண்டியூரைத் தொழுது, வடகரையிலுள்ள திருவையாறு தலத்தில் பணிந்துப் பின்னர் மீண்டும் தென்கரையிலுள்ள பூந்துருத்தி; திருவாலம்பொழில் தலங்களில் பணிந்தேத்தி அன்றைய இரவு ஆலம்பொழிலிலுள்ள திருமடமொன்றில் தங்கித் துயில் கொள்கின்றார். கண்ணுதற் கடவுள் கனவில் எழுந்தருளி வந்து 'மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?' என்று அருள் புரிகின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 71):
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவையாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத்தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 72):
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோஎன்று
குழகாகியதம் கோலமெதிர் காட்டியருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபாலேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பியாரூரர்.
தம்பிரான் தோழர் உளம் நெகிழ்ந்து மீண்டும் வடகரையிலுள்ள மழபாடி தலத்தினைச் சென்றடைகின்றார். அன்பர்கள் சூழ ஆலயத்துள் சென்று பாம்பணியும் பரம்பொருளை உடலெலாம் புளகமுற வீழ்ந்துப் பணிகின்றார். இவ்விடத்தில் ஒரு சிறு நுட்பம், உலகியலில், நமக்கு மிக நெருக்கமானவர்கள் குறித்த முக்கியமான நாளையோ; நிகழ்வையோ மறந்திருந்துப் பின் அவர்கள் சிறிது ஏமாற்றத்துடன் நமக்கதனை நினைவூட்டுகையில், தர்ம சங்கடத்துடன் மறந்ததற்கான காரணத்தினை ஒருவாறு விளக்க முனைந்துப் பின்னர் அவர்களின் மன வருத்தம் நீங்குமாறு முன்னினும் இரு மடங்காக மகிழ்வுறச் செய்து நாமும் உடன் சேர்ந்து மகிழ்வோம் அல்லவா?
இங்கு நம் சுந்தரனாரும் அதே நிலையில் மழபாடி முதல்வரின் திருச்சன்னிதியில் நின்று, 'பொன்போலும் மேனியனே, புலித்தோலினை அணிந்து மின்னல்போலும் ஒளி பொருந்திய செஞ்சடையில் கொன்றை சூடி அருளும் தலைவனே, உணர்ந்து அடைதற்கரிய மாமணியே, மழபாடியுள் அற்புதமாய் எழுந்தருளியுள்ள மாணிக்கமே, அடியேனுக்குற்ற தோழராகவும்; தாயாகவும்; தலைவராகவும்; இறைவராகவும்; யாவுமாகவும் விளங்கும் தன்மையனே, உனையன்றி இனி வேறெவரை நினைத்து விடப் போகின்றேன் ஐயனே? என்று கண்ணீர் பெருக்கித் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார்,
(சுந்தரர் தேவாரம் - திருமழபாடி - திருப்பாடல் 1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
ஒப்புவமையில்லாத திருப்பதிகம் என்றிதனைப் போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் ('தன்னேரில்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது').
No comments:
Post a Comment