சுந்தரர் (ஒற்றியூரில் சங்கிலியாரின் திருஅவதாரம்):

(1)
திருக்கயிலையில் முன்னர் அனிந்திதை எனும் திருநாமத்தோடு விளங்கியிருந்த சிவஞானச் செல்வியார், ஆலமுண்ட அண்ணலின் திருவருள் ஏவலால், திருவொற்றியூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலுள்ள ஞாயிறு எனும் சிற்றூரில், வேளாளர் மரபினரான ஞாயிறுகிழார் எனும் கொள்கைச் சிறப்புடைப் பெரியோருக்குப் புதல்வியாக அவதரித்து, 'சங்கிலியார்' எனும் திருப்பெயரில் இனிது வளர்ந்து வருகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 207)
நாலாம் குலத்தில் பெருகு நலமுடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிறு கிழவர்
பால்ஆதரவு தருமகளார் ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலாலம்சேர் கறைமிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்

(2)
திருக்கயிலையில் பன்னெடுங்காலம் உமையம்மைக்கு அணுக்கத் தொண்டு புரிந்திருந்த தன்மையினால், சிறு பிராயம் முதலே சங்கிலியாருக்கு அம்பிகையின் திருவடிகளில் அன்பும் ஈடுபாடும் இயல்பாகத் தோன்றுகின்றது, தமது முந்தைய நிலையினையும் தாமாகவே உணரப் பெறுகின்றார் ('பண்டைய தவப்பயனால் திருவருள் முன்னின்று உணர்த்த - தாமாகவே உணரப் பெறுகின்றார்'),

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 208)
மலையான் மடந்தை மலர்ப்பாதம் மறவா அன்பால் வந்தநெறி
தலையாம் உணர்வு வந்தணையத் தாமேஅறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலையாயின அப்பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்

No comments:

Post a Comment