சுந்தரர் (திருவாரூருக்கு அருகிலுள்ள) நன்னிலத்தில் எழுந்தருளியுள்ள மதுவனேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் போற்றி அங்குள்ள திருமடமொன்றில் தங்கியிருக்கின்றார். திருவீழிமிழலை வாழ் அந்தணர்கள், வீழிமிழலையிலிருந்து நன்னிலம் வரையிலான பாதை முழுமைக்கும் (சுமார் 12 கி.மீ) நடைப்பாவாடையிட்டு, இருமருங்கிலும் ஆங்காங்கே வாழை;கமுகுகளை நிரைநிரையாக நாட்டி, தோரணங்களால் அலங்கரித்துப் பின் நன்னிலத்தில் தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கிப் போற்றியவாறு வீழிமிழலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 57):
பாடிஅங்கு வைகியபின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும் நடைக்காவணம் பாவாடையுடன்
மாடு கதலி பூகநிரை மல்க மணித்தோரண நிரைத்து
அங்கு பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு காதலோடு சிவபூஜைக்கென விண்ணினின்றும் கொணர்ந்த ஒப்புவமையில்லா விண்ணிழி விமானத்தினை முதலில் பணிந்துப் பின் தெய்வங்களும் உணர்தற்கரிய மிழலை இறையவரை உளமுருகத் தரிசித்து, அற்புதத் திருப்பதிகம் ஒன்றினால் சிவமூர்த்தியின் அருள் பெற்றோரைத் திருப்பாடல்கள் தோறும் குறிப்பிட்டுப் பின் 'அடியேனுக்கும் அருளுதீரே' என்று நயமாக விண்ணப்பித்துப் போற்றுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 58):
வந்து நம்பி தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்றவரும்
சிந்தை மலர்ந்து திருவீழிமிழலை இறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை இழிந்த மொய்யொளிசேர் கோயில்தன்னை முன்வணங்கிப்
பந்தமறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 59):
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகமுடன் பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை சாத்தியங்குச் சாருநாள்.
8ஆம் திருப்பாடலில் ஞானசம்பந்தருக்கும்; நாவுக்கரசு சுவாமிகளுக்கும், தமிழோடு இசைகேட்கும் பெருவிருப்பத்தால், வீழிமிழலையில் நாள்தோறும் படிக்காசு நல்கி அருள் புரிந்த அற்புத நிகழ்வினைப் பதிவு செய்து மகிழ்கின்றார்,
(சுந்தரர் தேவாரம்: திருவீழிமிழலை: திருப்பாடல் 8):
பரந்த பாரிடம் ஊரிடைப் பலிபற்றிப் பாத்துணும் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கு இடமாய திருமிழலை
இருந்து நீர்தமிழோடு இசைகேட்கும் இச்சையால் காசுநித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே!!!
No comments:
Post a Comment