சுந்தரர் (ஒற்றியூர் எல்லையில் கண்பார்வை மறைப்பிக்கப் பெறுதல்):

(1)
சுந்தரர் ஒற்றியூரில் மூன்று பருவ காலங்கள் சங்கிலியாருடன் மகிழ்வுடன் எழுந்தருளி இருக்கின்றார். இந்நிலையில் திருவாரூர் இறைவரை நினைந்து 'எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆருர் இறைவனையே' என்று பிரிவாற்றாமையால் உளம் வருந்திப் பாடுகின்றார்.

(2)
'சங்கிலியாரைப் பிரியேன்' என்று அளித்திருந்த வாக்கு ஒருபுறம், தியாகேசப் பரம்பொருளைத் தரிசிக்கத் துடிக்கும் பெருங்காதல் மற்றொருபுறம் என்று தம்பிரான் தோழர் செய்வதறியாது தவிக்கின்றார். 'எண்ணிறந்த சிவத்தலங்களைத் தரிசித்துப் பரவியிருப்பினும் நம் நம்பிகளின் உள்ளமும் ஆன்மாவும் திருவாரூர் இறைவரின் திருவடிகளிலேயே பொருந்தியுள்ளது' என்பதனைப் பெரிய புராணப் பகுதிகள் வாயிலாக உணரப் பெறலாம்.

(3)
இறுதியில் ஆரூர் இறைவரிடத்துள்ள பெருங்காதலே வெல்கின்றது. அளித்த வாக்கினை மீறத் துணிந்து, ஆதிபுரீஸ்வரப் பரம்பொருளைத் தொழுது விடைபெற்று ஒற்றியூர் நகரின் எல்லையினைத் தாண்டிச் செல்ல முனைகின்றார். அக்கணமே திருவருள் ஏவலால் இருகண் பார்வையும் மறைப்பிக்கப் பெற்று, அவ்விடத்திலேயே மூர்ச்சித்து வீழ்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 274)
பின்னொருநாள் திருவாரூர் தனைப்பெருக நினைந்தருளி
உன்ன இனியார் கோயில் புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னை அகலப் புக்கார் தாம்செய்த சபதத்தால்
முன்அடிகள் தோன்றாது கண்மறைய மூர்ச்சித்தார்

(4)
சிறிது நேரத்தில் உணர்வு பெற்றெழுந்து, பெரிதும் திகைப்புற்று, 'சங்கிலிக்கு அளித்த வாக்கினை மீறியதால் இவ்வினை எய்தியுள்ளது. இனி எம்பெருமானைப் பாடி இக்கொடும் துன்பத்தினின்றும் விடுபடுவேன்' என்று எண்ணுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 275)
செய்வதனை அறியாது திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால் சூளுறவு மறுத்ததனால்
இவ்வினை வந்தெய்தியதாம் எனநினைந்(து) எம்பெருமானை
வெவ்விய இத்துயர் நீங்கப் பாடுவேன் எனநினைந்து

(4)
தமக்குற்ற துயருக்கும் பழிக்கும் அஞ்சி நாணமுற்று, 'அழுக்கு மெய்கொடு' எனும் திருப்பதிகத்தினை பாடி, அதன் பாடல்கள் தோறும் தம்முடைய நிலையினை ஆதிபுரீஸ்வர அண்ணலிடம் பலப்பல விதங்களில் எடுத்துரைத்துப் பிழை பொறுக்குமாறு மன்றாடி விண்ணப்பிக்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 276)
அழுக்கு மெய்கொ(டு) என்றெடுத்த சொற்பதிகம்
  ஆதி நீள்புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்றுரைப்பார்
  மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்றிரந்தே
  எய்து வெந்துயர்க் கையறவினுக்கும்
பழிக்கும் வெள்கி நல்லிசைகொடு பரவிப்
  பணிந்து சாலவும் பலபல நினைவார்
-
(சுந்தரர் தேவாரம் - திருவொற்றியூர் - திருப்பாடல் 1)
அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படற்பாலதொன்றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்; பிழைப்பனாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான்அறியேன் மறுமாற்றம்
ஒழுக்க என்கணுக்கொரு மருந்துரையாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே
*
(5)
ஒற்றியூர் முதல்வர் அருளாதிருக்க, 'இறைவரின் அருள் இதுவே போலும்' என்று உளம் வெதும்பியவாறு, ஆங்காங்கே செல்வோரிடம் வழிகேட்டவாறே, திருவாரூர் தலம் நோக்கித் தன்னந்தனியே பயணிக்கத் துவங்குகின்றார் நம் நாவலூர் வேந்தர்.

No comments:

Post a Comment