சுந்தரர் (திருத்துருத்தியில் சரும நோய் நீங்கப் பெற்று மகிழ்தல்):

(1)
சுந்தரர், திருத்துருத்தி இறைவரிடம் தனக்குற்ற சரும நோயினைப் போக்கியருளுமாறு விண்ணப்பிக்க, மதிசூடும் அண்ணலும் அசரீரியாய் 'அன்பனே, நமது வடகுளத்தில் நீராடிப் பிணி நீங்கப் பெறுவாய்' என்றருள் புரிகின்றார்,
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 298):
பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திருவருள் புரிவார்
விரவிய இப்பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர் வண்டறை தீர்த்த வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில் திருத்தொண்டர்தாம் கைதொழுது புறப்பட்டார்

(2)
நம்பிகளும் நான்மறை நாயகரான திருத்துருத்தி முதல்வரைத் தொழுதவாறே ஆலயத் திருக்குளத்தில் மூழ்கியெழ, சருமப் பிணி நீங்கியதோடு ஒளிமிகுந்த திருமேனியையும் திருவருளால் எய்தப் பெறுகின்றார்,
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 299):
மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதமெலாம் 
தொக்க வடிவாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதிய பிணியது நீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி ஆயினார்

(3)
அங்குள்ளோர் யாவரும் அதிசயித்துப் போற்றும் வகையில் குளத்தினின்றும் வெளிப்பட்டு, உடை புனைந்து; ஆலயத்துள் சென்று, திருத்தொண்டர்கள் சூழ்ந்திருக்க, இறைவரின் திருமுன்பாக 'மின்னுமா மேகங்கள்' எனும் பனுவலால், 'உத்தவேதீஸ்வரர்; சொன்னவாறு அறிவார்' எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கும் சிவமூர்த்தியின் திருவருளை, எண்திசையுளோரும் உய்வு பெறுமாறு போற்றி செய்கின்றார், 
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 300):
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டுபெரும் காதலினால் கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா மேகம்எனும் சொற்பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்திசைத்தார்
-
(சுந்தரர் தேவாரம் - திருத்துருத்தி - திருப்பாடல் 1)
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்துஅருவி
    வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்தெற்றும்
அன்னமாம் காவிரி அதன்கரை உறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெருமானை
    என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை

(4)
(குறிப்பு: 'திருத்துருத்தி' நாகப்பட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள 'காவிரி - தென்கரைத் தலம்', தற்கால வழக்கில் 'குத்தாலம்'. திருவாவடுதுறையிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், திருமணஞ்சேரி; திருவேள்விக்குடி தலங்களிலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமையப் பெற்றுள்ளது).

No comments:

Post a Comment