சுந்தரர் (சங்கிலியாருக்கு மகிழமர இரகசியத்தை உணர்த்தி அருள் புரிந்த ஒற்றியூர் இறைவர்)

(1)
சுந்தரர் ஒற்றியூர் இறைவரிடம், 'சங்கிலியுடன் திருச்சன்னிதிக்கு வாக்களிக்க வரும் வேளையில், ஐயனே! நீர் அச்சிவலிங்க மூர்த்தத்தினின்றும் நீங்கி மகிழ மரத்தடியில் எழுந்தருளி இருத்தல் வேண்டும்' என்று விண்ணப்பிக்க, சிவமூர்த்தியும் 'அவ்வாறே செய்வோம்' என்றருள் புரிகின்றார்.

(2)
பின்னர் ஆதிபுரீஸ்வரப் பரம்பொருள் மீண்டும் சங்கிலியாரின் கனவினில் எழுந்தருளிச் செல்கின்றார் ('இறைவர் இம்முறை எழுந்தருளுவதன் காரணம் யாதென்று சேக்கிழார் பெருமானார் சிந்திக்கின்றார், தோழரான சுந்தரருடன் திருவிளையாடல் ஒன்றினைப் புரிந்தருளும் பொருட்டோ? அல்லது சங்கிலி நாச்சியாரின் வழித்தொண்டுச் சிறப்பினை நினைந்தோ? - அறியேனே' என்று முடிவு கூற இயலாமல் வியக்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 250):
அஞ்சலி சென்னியில் மன்ன அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத் திருவிளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார் வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள் மீளவும்அணைந்தார் அவர்க்குறுதி சொல்லுவார்

(3)
வேத முதல்வர் சங்கிலியாரிடம், 'நம் சன்னிதி முன்னர் சுந்தரன் உறுதிகூற முன்வந்தால் அதனை ஏற்காமல், மகிழ மரத்தருகில் அதனைப் பெற்றுக் கொள்வாய்' என்றருளிச் செய்கின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 251):
சங்கிலியார் தம்மருங்கு முன்புபோல் சார்ந்தருளி
நங்கை உனக்காரூரன் நயந்து சூளுறக் கடவன்
அங்கு நமக்கெதிர் செய்யும் அதற்குநீ இசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க் கொள்கஎனக் குறித்தருள

(4)
சங்கிலியார் அகம்குழைந்து கண்ணருவி பாய 'மாலயனும் அறிதற்கரிய எந்தை பெருமானே, இந்த இரகசியக் குறிப்பினை உணர்த்தி அருளிய தன்மையினால், உம்முடைய அடியவளெனும் பெரும்பேற்றினைப் பெற்று உய்ந்தேன்' என்று திருவடி தொழுது போற்றுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 252):
மற்றவரும் கைகுவித்து மாலயனுக்(கு) அறிவரியீர்
அற்றம் எனக்கருள் புரிந்த அதனில் அடியேனாகப்
பெற்ற(து) யான் எனக்கண்கள் பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம் சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்

(5)
பின்னர் கண்விழித்தெழுந்து, இறைவரின் அருட்செயலை நினைந்து அதிசயமுற்று மீண்டும் கண்துயில முயலாதவராய், அருகில் உறங்கியிருக்கும் தோழியரை துயிலெழச் செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 253):
தையலார் தமக்கருளிச் சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ(து) அதிசயத்தால் உணர்ந்தெழுந்(த) அவ்விரவின்கண்
செய்யசடையார் அருளின் திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில் சேடியரை அணைந்தெழுப்பி

(6)
சங்கிலியார் இறைவரின் அருளிச் செயல்களைத் தோழியரிடம் எடுத்துரைக்க, அவர்களோ 'தெய்வங்களும் காண்பதற்கரிய ஆதிப் பரம்பொருள் ஒருமுறைக்கு இருமுறை கனவில் எழுந்தருளி வருவாராயின் இவர்தம் தவச் சிறப்பினை என்னென்பது?' என்றெண்ணி, அச்சமும்; மகிழ்ச்சியும்; அதிசயமும் ஒருசேர எய்திய நிலையில் சங்கிலியாரைப் பணிகின்றனர், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 254):
நீங்குதுயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்தறியுமவர்
தாம்கனவில் எழுந்தருளித் தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர் பயத்தினுடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்

No comments:

Post a Comment