சுந்தரர் (திருவொற்றியூரில் ஒரு நெகிழ்விக்கும் வரவேற்பு):

சுந்தரர் திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு 'மண்ணுலகின் சிவலோகம்' என்று போற்றப் பெறும் திருவொற்றியூர் தலத்தினைச் சென்றடைகின்றார். ஒற்றியூர் வாழ் திருத்தொண்டர்கள் நம்பிகள் எழுந்தருளவுள்ள செய்தியினைக் கேள்வியுற்றுப் பெரிதும் மகிழ்கின்றனர். திருவீதிகளெங்கும் வாழை; பாக்கு மரங்கள் மற்றும் தோரணங்களால் சிறப்புற அலங்கரித்து, பொற்சுண்ணம் பொருந்திய நிறைகுடங்கள் மற்றும் தூப தீபங்களோடு தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கச் செல்கின்றனர், 
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 200):
அண்ணல் தொடர்ந்தாவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி இறைவரடியார் எதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப தீபமெடுத்துத் தொழஎழுங்கால்

மங்கள வாத்தியங்கள் நகரெங்கும் முழங்க, அணிசெய்யப் பெற்ற ஆடலரங்குகளில் சிவச்செல்வியர் மகிழ்வுடன் நடனமிட, விண்ணவர் மலர்மழையால் திருவீதிகளை நிறைவிக்க, நாவலூர் மன்னர் அடியவர்களுடன் இனிது எழுந்தருளி வருகின்றார்
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 201):
வரமங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணியரங்கில்
புர மங்கையர்கள் நடமாடப் பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த பிரானார் விரும்பு பெரும் தொண்டர்

கடல் போல் திரண்டு சுந்தரனாரை எதிர்கொள்ளும் ஒற்றியூர் திருத்தொண்டர்கள், நம்பிகளைத் தங்களது சுற்றத்தினர் போன்று சூழந்திருந்து அன்பு பாராட்டி, அகம் குளிர்ந்து போற்றுகின்றனர். அடியார்க்கு அடியராம் நம் நம்பிகளும் அப்பெருமக்களை எதிர்தொழுது ஒற்றியூருறைப் பரம்பொருளின் திருக்கோயில் வாயிலை அடைகின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 202):
ஒற்றியூரில் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத் தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழவேறுடையவர்தம் கோயில் வாயில் எய்தினார்

கோபுரத்தைப் பணிந்து உட்புகுந்து, திருச்சன்னிதியினை வலமாய் வந்து ஒற்றியூருறைப் பரம்பொருளின் திருமுன்பு உச்சி கூப்பிய கையினராய், ஊனும் உயிரும் குழைந்துருகப் பெருகும் காதலோடு வீழ்ந்துப் பணிகின்றார், 

(சுந்தரர் தேவாரம்: திருவொற்றியூர் - திருப்பாடல் 1)
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.

பின்னர் அத்தலத்திலேயே சில காலம் தங்கியிருந்து ஆலமுண்டருளும் ஆதி மூர்த்தியை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார்.

No comments:

Post a Comment