சுந்தரர் (சங்கிலியாரின் கனவில் தோன்றி அருள் புரிந்த ஒற்றியூர் இறைவர்)

(1)
சுந்தரனார் ஒற்றியூர் ஆலய மலர் மண்டபத்தில் சங்கிலியாரைக் கண்டு காதல் கொள்கின்றார், உடன் திருச்சன்னிதி சென்று ஆதிபுரீஸ்வரப் பரம்பொருளிடம் சங்கிலியாரைத் தந்தருளுமாறு வேண்டிக் கொள்கின்றார். அன்றைய மாலைப் பொழுதில் வன்தொண்டரின் முன்பாக எழுந்தருளித் தோன்றும் ஒற்றியூர் அண்ணலார் 'இப்புவியில் எவரொருவராலும் அடைதற்கரிய அருந்தவச் செல்வியான சங்கிலியை உனக்குத் தருகின்றோம், கவலையை ஒழிப்பாய்' என்றருள் புரிந்து மறைகின்றார். 

(2)
பின்னர் இறைவர் சங்கிலியாரின் கனவினில் எழுந்தருளித் தோன்ற, சங்கிலி நாச்சியார் ஆதிமூர்த்தியைத் தொழுதிறைஞ்சி, இறைவரின் மீதுற்ற அன்பு மென்மேலும் பெருகிய வண்ணமிருக்க, சிவஞான இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்தவாறு, 'ஐயனே! அடியவளை உய்விக்க எழுந்தருளி வந்த இப்பெரும் பேற்றிற்கு என்ன கைமாறு செய்வேன்? என்று உளமுருகி விண்ணப்பிக்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 238):
தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந்(து) அடியேன்உய்ய எழுந்தருளும்
பேற்றுக்(கு) என்யான் செய்வதெனப் பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்றருளிச் செய்கின்றார்

(3)
இறைவரும், 'சீரிய தவமுடைய சங்கிலியே கேள், நம் பால் மிகவும் அன்புடைய; மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய, வெண்ணெய்நல்லூரில் யாவருமறிய நம்மால் வலிய ஆட்கொள்ளப் பெறும் உரிமையுடைய நம்பியாரூரன் நம்பால் உனை வேண்டினான். நீ அவனை மணத்தால் மகிழ்வுடன் அணைவாய்' என்றருள் புரிகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 239):
சாரும் தவத்துச் சங்கிலிகேள் சால என்பால் அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும்அறிய யான்ஆள உரியான் உன்னை எனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.

(4)
சங்கிலியார் இறைவரின் திருவடித் தாமரைகளில் மற்றுமொருமுறை வீழ்ந்தெழுந்து, சிவ தரிசனப் பேற்றினால் உடல் விதிர்விதிர்த்து நடுக்கமுற்ற நிலையில், 'அம்பிகை பாகத்து அண்ணலே, நீர் அருளிச் செய்தவருக்கே அடியவள் உரித்தானவள், உம்முடைய கட்டளையைச் சென்னிமீது தரித்துக் கொண்டேன். வைதீக வேள்வியில் எனை நம்பியாரூரருக்குத் தரவிருக்கும் இவ்வேளையில், உம்முடைய அடியவளுக்கு விண்ணப்பமொன்றும் உண்டு' என்று தொழுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 241):
எம்பிரானே நீர்அருளிச் செய்தார்க்(கு) உரியேன் யான்; இமையோர்
தம்பிரானே அருள்தலைமேல் கொண்டேன்; தக்க விதிமணத்தால்
நம்பியாரூரருக்(கு) என்னை நல்கியருளும் பொழு(து) இமயக்
கொம்பின்ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறமொன்(று) உளதென்பார்.

(5)
சங்கிலியார் நாணம் மீதுற மேலும் தொடர்கின்றார், 'உலகீன்ற அம்மையின் திருமுலைகள் தோயும் திருமார்பினைக் கொண்டருளும் எந்தை பெருமானே, அவர் திருவாரூரில் மகிழ்ந்து விளங்குபவர் என்பதையும் திருவுள்ளத்தில் கொண்டு அருள்புரிதல் வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 242):
பின்னும் பின்னல் முடியார்முன் பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னும் திருவாரூரின்கண் அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ(து)
என்னும் தன்மை அறிந்தருளும் எம்பிராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர் என்றார் குன்றா விளக்கனையார்

(6)
ஒற்றியூர் அண்ணலார் இருவரின் உளக் குறிப்பையும் திருவுள்ளத்து எண்ணி, 'உனைப் பிரியேன் என்று சுந்தரன் உறுதி கூறுவான்' என்றருள் புரிந்து கனவினின்றும் திருவுருவம் மறைத்தருள்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 243):
மற்றவர்தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்தருளி உரைசெய்வார்
பொற்றொடியாய் உனைஇகந்து போகாமைக்(கு) ஒருசபதம்
அற்றமுறு நிலைமையினால் அவன்செய்வான் எனஅருளி

No comments:

Post a Comment