சுந்தரர் (சேரமான் நாயனாருடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு):

சேரமான் நாயனார் கொடுங்களூரிலிருந்து புறப்பட்டு, எண்ணிறந்த வீரர்களும் உடன்வர மலைநாடு; கொங்கு நாடுகளின் எல்லையைக் கடந்து பயணித்து இறுதியாய்ச் சோழவள நாட்டிலுள்ள தில்லைத் திருத்தலத்தினை வந்தடைகின்றார். கூத்தர் பிரானைத் தரிசித்துப் 'பொன் வண்ணத்து அந்தாதியால்' போற்றி செய்துத் திருவருளால் சிலம்போசையும் கேட்டு மகிழ்கின்றார். பல தினங்கள் அங்கு தங்கியிருந்து, காலங்கள் தோறும் அம்பலவாணரை வணங்கித் திருவருள் வெள்ளத்தில் திளைத்துப் பின் சுந்தரரைத் தரிசிக்கத் திருவாரூர் நோக்கிச் செல்கின்றார். 

வழியில் சீர்காழி உள்ளிட்ட திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருவாரூரைச் சென்றடைகின்றார். சுந்தரரும் மகிழ்ந்து சேரர்கோனை எதிர்கொண்டு வரவேற்க, சேரமான் நாயனார் பெருவிருப்பத்துடன் நம்பிகள் முன் தாழ்ந்துப் பணிகின்றார். வன்தொண்டரும் எதிர்வணங்கி அரசர் பெருமானை அணைத்தெடுத்துப் பெருகும் அன்புடன் ஆலிங்கனம் புரிய, என்பும் உருகுமாறு அகத்தே உயிர்கள் ஒன்றெனக் கலக்க, புறத்தே உடல்களும் ஒன்றெனவே தோன்றும் வண்ணம் பொருந்திச் சிவானந்தம் எய்துகின்றனர். இவ்வற்புத சங்கமத்தினைத் தரிசித்து மகிழும் அடியவர்கள், சுந்தரனாரைச் 'சேரமான் தோழர்' என்றும் போற்றுகின்றனர்.
   
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 65):
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏற மாட்டாது அலைவார் போல்
என்பும் உருக உயிரொன்றி உடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்

ஒருவருக்கொருவர் இனிய மொழிகளைக் கூறி மகிழ்ந்து, 'இங்கனம் கூட்டுவித்த இறைவருக்கு யாது கைமாறு புரிய இயலும்? என்று நெகிழ்கின்றனர். பின் சேரனாரின் செங்கரங்களை நட்புரிமையுடன் பற்றித் திருவாரூர் திருக்கோயிலுள் செல்கின்றார் நம்பிகள். இருபெரும் திருத்தொண்டர்களும் தேவாசிரியன் மண்டபத்தினைத் தொழுதுப் பின் பூங்கோயிலை அடைகின்றனர். சுந்தரனார் இறைவர் திருமுன்பு நின்று தொழ, சேரமான் நாயனார் அவருக்குப் பின்னிருந்து வணங்கிக் கண்ணீர் அருவியாய்ப் பெருகியோட, நிலமிசை வீழ்ந்து பணிகின்றார் . 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 68):
சென்று தேவாசிரியனை முன்இறைஞ்சித் திருமாளிகை வலங்கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்

பின் தியாகேசப் பரம்பொருளின் திருமுன்பு, நாவலூர் அரசரான சுந்தரனாரும் காணுமாறு, மும்மணிக்கோவை எனும் பனுவலால் சேரர்கோன் போற்றி செய்ய, ஆரூருறை அற்புதக் கடவுளும் அதனை ஏற்றுப் பேரருள் புரிகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 69):
தேவர் முனிவர் வந்திறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும் அவரைத் திருமும்மணிக்கோவை
நாவலூரர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார் தம்பிரானார் தாம்கொண்டார்.

No comments:

Post a Comment