சுந்தரர் (ஒற்றியூர் இறைவரின் அருளாசியோடு சங்கிலி நாச்சியாருடன் திருமண நிகழ்வு)

(1)
சுந்தரனார், அதிகாலைப் பொழுதில், ஒற்றியூர் ஆலய மகிழ மரத்தருகில் 'உனைப் பிரியேன்' என்று சங்கிலியாருக்கு வாக்களிக்கின்றார். அன்றைய இரவுப் பொழுதிலேயே ஆதிபுரீஸ்வரப் பரம்பொருள் ஒற்றியூர் வாழ் திருத்தொண்டர்களின் கனவில் எழுந்தருளிச் செல்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 264):
அன்றிரவே ஆதிபுரி ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்திகழ்பூண் வன்தொண்டர் புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றியூர் நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு மனம்கொள்ள உணர்த்துவார்

(2)
'சங்கிலியைச் சுந்தரனுக்கு விண்ணுளோரும் அறியுமாறு மணம் புரிவிப்பீர்' என்று இறைவர் பணித்தருள, அத்தொண்டர்கள் ஆலமுண்ட அண்ணலின் ஆணையினைச் சிரமேற் கொண்டெழுகின்றனர்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 265):
நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்திடைநம் ஏவலினால் மணவினைசெய்(து)
உம்பர்வாழ் உலகறிய அளிப்பீர் என்றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள்தலைமேல் கொண்டெழுவார்

(3)
அப்பதியிலுள்ள திருத்தொண்டர்களும் மற்றுமுள அன்பர்களுமாய்ச் சேர்ந்து, விண்ணுளோரும் வாழ்த்தி வணங்கும் வண்ணம், வன்தொண்டனாருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மண வேள்வியினைச் சிறப்புடன் நடத்துவிக்கின்றனர், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 266):
மண்ணிறைந்த பெரும்செல்வத் திருவொற்றியூர் மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர் எழிற்பதியோர் உடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூமழை பொழியக்
கண்ணிறைந்த பெரும்சிறப்பில் கலியாணம் செய்தளித்தார்

No comments:

Post a Comment