சுந்தரர் (கச்சி ஏகம்பத்தில் இடக்கண் பார்வை பெற்று மகிழ்தல்):

சுந்தரர், இருகண் பார்வையும் மறைப்பிக்கப் பெற்றிருந்த நிலையில், வழிதோறுமுள்ள தலங்களை அகக் கண்களால் தரிசித்துப் போற்றியவாறே காஞ்சீபுரத்தினைச் சென்றடைகின்றார். முதற்கண் காமாக்ஷி அன்னையைத் தொழுது, ஏகம்ப அண்ணலாரிடம் தன் பொருட்டு பரிந்துரை செய்தருளுமாறு விண்ணப்பித்துப் பின் ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலுக்குச் செல்கின்றார். 

(1)
மூலக்கருவறையில் இறைவரின் திருமுன்பு சென்று, 'விண்ணவர் அமுதுண்ண ஆலமுண்டருளிய கருணைப் பெருவெள்ளமே, கச்சிப் பேரரசே, ஏகம்பம் மேவும் முழுமுதற் பொருளே, அடியவன் நினைந்து இழைக்காத சிறுபிழையைப் பொறுத்தருள்வது நின் பண்பன்றோ ஐயனே! உன் எழிற்பவளத் திருக்கோலத்தை தரிசித்து உய்வு பெற, எளியேனுக்குக் கண்பார்வையை மீண்டும் அளித்தருளாயோ?' என்று உளமுருக முறையிட்டு வீழ்ந்து பணிகின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 286):
விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங்(கு) யான்காண எழிற்பவள
வண்ணா கண்ணளித்தருளாய் எனவீழ்ந்து வணங்கினார்

(2)
ஏலவார்க்குழலி அம்மையின் திருக்கரங்களால் அர்ச்சிக்கப் பெற்ற திருவடிகளைக் கொண்டருளும் ஏகம்ப முதல்வர், நம்பிகளின் பொருட்டு இடபாகத்துறையும் காமாக்ஷி அம்மையின் திருவுள்ளம் முன்னமே கனிந்திருந்த தன்மையினால், நம்பிகளுக்கு இடக்கண் பார்வையை அளித்துப் பேரருள் புரிகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 287):
பங்கயச்செங் கைத்தளிரால் பனிமலர்கொண்(டு) அருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடுபரவிப் போற்றிய ஆரூரருக்கு
மங்கை தழுவக் குழைந்தார் மறைந்தஇடக் கண்கொடுத்தார்

(3)
அடிமுடி அறியவொண்ணா ஏகம்பப் பரம்பொருள் முன்னர் அம்பிகை தழுவக் குழைந்த அரியதொரு திருக்கோலம் காட்டியருள, ஆரூரர் அந்நிலையில் அடைந்த சிவானந்தப் பேற்றினை யாவரே விளக்கவல்லார்? ஆடுகின்றார்; பாடுகின்றார்; அழுகின்றார்; தொழுகின்றார், பன்முறை பணிந்தெழுகின்றார். 'ஆலம் தான் உகந்து அமுது செய்தானை' எனும் பாமாலையால் அம்பிகை பாகத்து அண்ணலாரைப் போற்றி செய்கின்றார். நம்பிகளின் பெருமகிழ்வினை இத்திருப்பதிகப் பாடல்களில் பொதிந்துள்ள துள்ளல் நடையிலும், அதீத கொஞ்சல் தொனியிலும் நம்மால் தெளிவாக உணர இயலும்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 288):
ஞாலந்தான் இடந்தவனும் நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார் கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்தெழுந்து களித்(து)
ஆலந்தான் உகந்தவன் என்றெடுத்(து) ஆடிப் பாடினார்

(சுந்தரர் தேவாரம் - கச்சி ஏகம்பம் - திருப்பாடல் 1)
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை; ஆதியை; அமரர் தொழுதேத்தும்
சீலம் தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார்அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

No comments:

Post a Comment