சுந்தரர் (பொன்னையும் பொருளையும் பறித்துச் சென்ற சிவ பூத கணங்கள்):

சுந்தரர், சேரமான் நாயனார் சமர்ப்பித்திருந்த பொற்குவியல்களைச் சுமந்து வரும் ஆட்கள் முன்செல்ல, திருத்தொண்டர்களுடன் மலைநாட்டின் எல்லையைக் கடந்து, கொங்கு தேசத்திலுள்ள திருமுருகன்பூண்டி எனும் தலம் வழியே பயணித்துச் செல்கின்றார். தன்னைத் தவிர்த்துப் பிறிதொருவர் தம் தோழருக்குப் பொன்னும் பொருளும் பரிசளிப்பது சிவமூர்த்தியின் திருவுள்ளத்திற்கு உகக்கவில்லை போலும், சிவ கணங்களைக் கொண்டு அப்பொருள் அனைத்தையும் பறித்து வருமாறு திருவுளம் பற்றுகின்றார்.  

வேடுவர் உருவில் தோன்றும் சிவகணங்கள், சுந்தரரின் பரிசனங்கள் செல்லும் வழியின் இருமருங்கிலும் சினந்து சென்று, வில்லில் கூரிய அம்புகளைப் பூட்டி, 'இப்பொருள்கள் யாவையும் கொடுக்காவிடில் உங்களைக் கொல்வோம்' என்று இடியென முழங்கி அச்சமூட்டி அவைகளைப் பறித்துக் கொள்கின்றனர், பொற்பொதிகளைச் சுமந்து வந்தோர் செய்வதறியாது பதறி, இது குறித்து சுந்தரனாரிடம் தெரிவிக்க விரைகின்றனர். அவ்வேடர்கள் சுந்தரருக்கு அருகில் மட்டும் செல்லாது விடுத்து அங்கிருந்து விரைந்தகன்று மறைகின்றனர். 

நடந்தேறிய நிகழ்வினை அறியப் பெறும் சுந்தரர், 'சேரமான் நாயனார் அன்பினால் சமர்ப்பித்திருந்த, சிவனடியார்க்குப் பயனாய்ச் சென்று சேர்தற்குரிய செல்வங்கள் களவு போவதோ?' என்றெண்ணியவாறு அருகிலுள்ள திருமுருகன்பூண்டி ஆலயத்துள் செல்கின்றார். 

'பெரும் கோபத்துடன் சுந்தரனார் திருக்கோயிலுள் சென்றார்' என்று பலரும் இந்நிகழ்வு குறித்து விவரிப்பர், ஆனால் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் சுந்தரனார் அவ்விதம் தன்னிலை இழந்திருப்பரோ எனில் இல்லை என்கின்றார் தெய்வச் சேக்கிழார், கூப்பிய கரங்களுடன் பெருவிருப்பத்துடன் ஆலயத்துள் நுழைகின்றாராம், அகச்சான்றாகப் பின்வரும் திருப்பாடலைக் காண்போம், 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 169):
அங்கணர்தம் கோயிலினை அஞ்சலி கூப்பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனிதநதி
திங்கள் முடிக்கணிந்தவர் தம் திருமுன்பு சென்றணைந்தார்

அன்பினால் உளம் குழைந்துருகி, மலர்க்கைகள் குவித்துத் தொழுது வீழ்ந்து வணங்கியெழுந்துப் பின் 'கொடுகு வெஞ்சிலை' எனும் திருப்பதிகத்தினால், 'எம்பெருமானே, இவ்விதம் அச்சுறுத்திப் பொருள் பறிக்கும் கொடிய வேடர் வாழுமிடத்து, உமையன்னையோடு எதன் பொருட்டு எழுந்தருளி இருக்கின்றீர்?' என்று ஆற்றாமையோடு வினவுகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 170):
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்துமைபாகம்
மருவியதம் பெருமான்முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுற வேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கிங்கு 
அருகிருந்தீர் எனக் கொடுகு வெஞ்சிலையம் சொற்பதிகம்

(சுந்தரர் தேவாரம் - திருமுருகன்பூண்டி - திருப்பாடல் 1):
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே

பின்னர் மெதுமெதுவே பாடல்களில் வன்மை கூடுகின்றது, 4ஆம் திருப்பாடலில் 'எம்பிரானே! உம்முடைய எருதின் கால்கள் உடையாது நல்ல நிலையில் உள்ளனவாயின் தாம் இவ்விடத்திலிருந்து நீங்கிச் செல்லாதிருப்பது எதன் பொருட்டு? என்று வெகுள்கின்றார், 8ஆம் திருப்பாடலிலோ, 'அம்பிகை பாகத்து அண்ணலே, தாம் முடவரும் அல்லீர், ஆதலின் இன்னமும் இவ்விடத்து நீங்காது உறைந்தருளும் காரணம் தான் என்ன?' என்று உரிமையன்பினால் கூடிய அடிமைத் திறத்தோடு பாடுகின்றார். 

திருப்பதிகம் நிறைவுறுகையில், சிவமூர்த்தியின் திருவருளால், சிவகணங்கள் சேரனாரின் பொற்குவியல்களைச் சிவப்பிரசாதமாக மீண்டும் திருக்கோயில் வாயிலில் சேர்ப்பித்து மறைய, சுந்தரனார் பெரிதும் மகிழ்ந்து திருவருட் திறத்தினைப் போற்றி செய்து பணிகின்றார்.

No comments:

Post a Comment