(1)
திருக்கயிலையில், சிவசாரூபம் பெற்றிருந்த உத்தமத் தொண்டரொருவர், சிவபரம்பொருள் சூடியருளும் திருமாலையினைத் தொடுத்தல்; அம்பிகை பாகனாருக்கு அருகில் திருநீற்றுப் பேழை தாங்கி நிற்றல் முதலிய அணுக்கத் தொண்டுகளைப் புரிந்து வருகின்றார்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 31)
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணைவான் உளன்
(2)
'ஆலால சுந்தரர்' எனும் திருநாமமுடைய அவர், திருமாலைத் தொண்டிற்கான மலர்களைக் கொய்துவரும் பொருட்டு திருக்கயிலைச் சாரலிலுள்ள நந்தவனமொன்றிற்குச் செல்கின்றார்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 32)
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள் முதல்வன் தனக்கு
இன்னவாம்எனும் நாள்மலர் கொய்திடத்
துன்னினான் நந்தனவனச் சூழலில்
(3)
அங்கு சுந்தரர் வரு முன்னமே; நால்வேதத் தலைவியாரான உமையன்னைக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வரும், அழகும் திருவும் பொலிந்து விளங்கும் பாவையர் இருவர் வருகை புரிகின்றனர்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 33)
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழல் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்குகின்ற கவினுடைப் பூவைமார்
(4)
கமலினி; அனிந்திதை எனும் திருநாமமுடைய அவ்விரு தேவியரும் அங்கு மலர் பறித்திருக்கையில், கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியின் திருவருள் ஏவ,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 34)
அந்தமில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென
(5)
மாதவம் செய்த தென்திசை உய்வு பெற்றுச் சிறக்கவும்; ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகை எனும் பனுவலை அருளிச் செய்யவும், ஆலால சுந்தரரின் கண்களும் கருத்தும் கணநேரம் அம்மாதரின் பால் செல்கின்றது. அவ்விரு பாவையரின் காதல் பார்வையும் அணுக்கத் தொண்டரின் மீது பொருந்துகின்றது,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 35)
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவார்அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
(6)
சுந்தரனார், மறுகணமே தன்னிலை உணர்ந்து, மலர் பறித்து மீண்டு ஆலமுண்டருளும் அண்ணலின் திருமுன்னர் சென்று தொழுகின்றார். பிறைமதிப் பரம்பொருளும் 'சுந்தரா! மாதர் மேல் மனம் வைத்தாய், ஆதலின் தென்னக பூமியில் பிறந்து அம்மாதருடன் காதலால் அணைவாய்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார்,
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 37)
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லியலாருடன்
காதல் இன்பம் கலந்(து) அணைவாய்என
(7)
'மன்மத தகனம் நிகழ்ந்தேறிய திருக்கயிலையில் காமமெனும் உணர்வு தோன்ற வாய்ப்பேயில்லை' என்று நம் வாரியார் சுவாமிகள் தெளிவுறுத்துவார். மேற்குறித்துள்ள 34ஆம் திருப்பாடலின் இறுதியில் 'ஈசர் அருளென' என்று தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளமையால், 'இச்செயல் சிவமூர்த்தியின் திருவருள் ஏவலால் நிகழ்ந்தேறியுள்ளது' என்பது தெளிவு ('ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்பார் நம் அப்பர் அடிகள்).
No comments:
Post a Comment