சுந்தரர் (திருத்தொண்டர் தொகை பாட சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிதல்):

சுந்தரனார் ஒரு சமயம் தியாகேசர் திருக்கோயிலுள், எண்ணிறந்த அடியவர்கள் கூடியிருந்த தேவாசிரியன் மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், 'இத்தொண்டர்களுக்கு அடியவனாகும் பெரும்பேறு என்று கிட்டுமோ? என்று உளத்துள் தொழுதவாறே பூங்கோயில் கருவறை நோக்கி முன்னேறிச் செல்கின்றார். 

(1)
மூலக் கருவறையில் இறைவரின் திருமுன்பு சென்று தொழும் வன்தொண்டரின் முன்னர், கோடி சூர்ய பிரகாசத்துடன் தியாகேசப் பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்றுகிறார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 336)
அடியவர்க்(கு) அடியனாவேன் என்னும் ஆதரவு கூரக்
கொடிநெடும் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள் பூங்கொன்றை வேய்ந்தார் அவர்க்கெதிர் காணக் காட்டும்
படிஎதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு

(2)
பூங்கோயில் மேவும் புராதனர், தன் திருவடிகளைப் போற்றி நிற்கும் நம்பிகளின் உள்ளக் குறிப்புணர்ந்து, அடியவர்களின் வழித்தொண்டுச் சிறப்பினை வன்தொண்டருக்கு முதற்கண் உணர்வித்துப் பின்னர் 'சுந்தரா! நமது அடியவர்களின் பெருமையினை மேலும் கேட்பாய்' என்றருளிச் செய்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 341)
இன்னவாறேத்து நம்பிக்(கு) ஏறுசேவகனார் தாமும்
அந்நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்

(3)
அடிமைத் திறம் பூண்டொழுகும் தன் தோழருக்கு ஒப்புவமையிலா அடியவர் பெருமக்களின் மேன்மையினை அறிவித்தருளும் நான்மறை நாயகர் 'இத்தன்மையரான நம் தொண்டர்களைச் சென்று நீ அடைவாய்' என்றருளிச் செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 342)
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்அன்பினால் இன்பம்ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரைநீ அடைவாய் என்று

(4)
இறைவரின் அமுத மொழி கேட்கப் பெறும் நம்பிகளும் 'குற்றமற்ற பெருநெறியினை இன்றே நான் பெற்றேன்' என்று திருவடி தொழுது நெகிழ்கின்றார். மதி சூடும் அண்ணலாரும், 'இனி நம் அடியவர்களை சென்று முறைமையாக வணங்கி, குற்றமிலா மெய்மையான பாமாலையொன்றினால் போற்றுவாய்' என்று பணித்தருள்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 343) 
நாதனார் அருளிச் செய்ய நம்பியாரூரர் நானிங்கு
ஏதம்தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியால்அவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொல் மாலை
கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற

(5)
பரவையார் கேள்வனார் பிறைமதிப் பரம்பொருளைப் பணிந்து, 'ஐயனே, வரம்பிலா சீர்மை பொருந்திய உம்முடைய அடியவர்களின் மேன்மையினை எங்கனம் வகுத்துணர்ந்து பாடுவேன்? எவ்விதத்திலும் அதற்குத் தகுதியற்ற எளியேனுக்கு நீரே மேன்மையான அப்பெரு ஞானத்தினை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 344) 
தன்னை ஆளுடைய நாதன் தான்அருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னவாறின்ன பண்பென்(று) ஏத்துகேன் அதற்(கு) யானார்
பன்னு பாமாலை பாடும் பரிசெனக்கருள் செய்என்ன

(6)
அம்பிகை பாகத்து அண்ணலாரும் உலகெலாம் உய்வு பெறுமாறு தன் திருவாக்கினால், 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் - என்று துவங்கி, எல்லையிலா புகழுடைய நம் தொண்டர்களைப் பாடுவாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 345) 
தொல்லை மால்வரை பயந்த தூயாள்தன் திருப்பாகர்
அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என்று
எல்லையில் வண்புகழாரை எடுத்திசைப்பா மொழிஎன்றார்

No comments:

Post a Comment