சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூரில் சுந்தரரைத் தரிசித்துத் தொழ, வன்தொண்டரும் எதிர்வணங்கி மகிழ்ந்து, சேரனாரின் செங்கரங்களை நட்புரிமையுடன் பற்றியவாறு திருவாரூர் திருக்கோயிலில் தரிசனம் செய்வித்துப் பின் சேரனாருடன் தம்முடைய திருமாளிகைக்குச் செல்ல, பரவையார் தூப தீப நிறைகுடங்களுடன் எதிர்கொண்டு வரவேற்கின்றார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 70):
அங்கண் அருள்பெற்றெழுவாரைக் கொண்டு புறம்போந்தாரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும் பூமாலைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார்
தம்பிரான் தோழர் சேரனாரை நல்லாசனத்தில் அமர்வித்து உடன் தாமும் எழுந்தருளியிருக்க, பரவையார் கணவனாரையும் சேரமான் நாயனாரையும் மாகேஸ்வர நியமப்படி பூசிக்கின்றார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 71):
சோதி மணிமாளிகையின் கண் சுடரும் பசும்பொற்கால் அமளி
மீது பெருமாள் தமையிருத்தி நம்பி மேவி உடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார் கொழுநனார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறையளித்தார்
No comments:
Post a Comment