சுந்தரர், திருவாரூருக்கு வருகை புரியும் சேரமான் பெருமாள் நாயனாரை எதிர்கொண்டு வரவேற்று அவருடன் தமது திருமாளிகையினைச் சென்றடைகின்றார். பரவையார் எதிர்கொண்டு வணங்கி, ஆசனத்தில் அமர்வித்து, நல்பூசனைகள் பல புரிகின்றார்.
பின்னர் சேரனாருக்குத் திருவமுது அமைக்குமாறு சுந்தரனார் கூற, பரவையார் அப்பணியில் விரைந்து ஈடுபடுகின்றார். சேரர்கோனுக்கும் அவருடன் பயணித்து வந்த அனைவருக்குமாய், வெவ்வேறு காய்கறிகளையும்; அறுசுவை உணவு வகைகளையும், உதவிக்கென உடனிருந்தோருடன் சேர்ந்து அமைக்கத் துவங்குகின்றார். 'சேர வேந்தர்' எனும் தன்மையைக் காட்டிலும், தவத்திற் சிறந்த மெய்யடியார் எனும் மேலான தகைமைக்கு ஏற்றவாறு, அன்புடனும் ஆர்வத்துடனும் விருந்துணவினை நிறைவுற அமைத்துப் பின் அது குறித்துக் கணவனாரான சுந்தரரிடம் அறிவிக்கின்றார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - திருப்பாடல் 73)
அரசர்க்கமைத்த சிறப்பினும்மேல் அடியார்க்கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன் விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார் புடை சூழ்ந்தவரோடமுது செயப்
பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்தறிவித்தார்
தம்பிரான் தோழர் அது கேட்டு மகிழ்ந்து, 'பரவையே, பண்டைய தவப்பயனால் சேரனார் நம் இல்லத்தில் எழுந்தருளி அமுது செய்யத் திருவருள் கூட்டுவித்துள்ளது, ஆதலின் காலம் தாழ்த்தாது அனைவருக்கும் அமுது செய்விப்பாய்' என்று அருளிச் செய்கின்றார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - திருப்பாடல் 74)
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்யச் செய் தவத்தால்
தாரின்மலி பூங்குழல் மடவாய் தாழாதமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில் இரண்டு படியா ஏற்றுதலும்
சுந்தரர் தம்முடன் அமர்ந்து அமுது செய்யுமாறு சேரமான் நாயனாரை அழைக்க, சேர வேந்தர் திடுக்கிட்டுப் பதறுகின்றார். 'மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய, திருவாரூர் இறைவரையே தோழராகப் பெற்றுள்ள நம்பிகளுடன் அருகமர்ந்து அமுது செய்யும் தகுதி தனக்கு ஒருசிறிதுமில்லை' என்று உள்ளத்து எண்ணுவாராய், வன்தொண்டரைப் பணிந்து 'அச்செயல் தகாது' என்று விரைந்து மறுக்கின்றார். சுந்தரர் சேரனாரின் நீண்ட கரங்களை அன்புடன் இறுகப் பற்றியவாறு மீண்டுமொரு முறை வேண்டிக் கொள்ள, நம்பிகளின் திருவுள்ளத்திற்கு இசையாதிருப்பதற்கு அஞ்சி சேரனார் ஒருவாறு உடன்படுகின்றார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - திருப்பாடல் 75)
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்தருள
வேண்டுமென்ன ஆங்கவரும் விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.
நம்பியாரூரரும் சேரனாரும் அருகமர்ந்து அமுது செய்ய, பரவையாரும்; உடனிருந்த பணியாளர்களும் அவர்கட்குச் சிறப்புடன் திருவமுது செய்விக்க, அவ்விடமே பெருமகிழ்வினால் சிறக்கின்றது. இவ்விதமாய் திருவமுது செய்விக்கும் அத்தூய பணியினைச் சிறப்புற நிறைவு செய்கின்றார் பரவையார். பின்னர் பச்சைக் கற்பூரம் சேர்த்த சந்தனக் கலவையையும், கத்தூரிச் சாந்தினையும், நறுமணம் வீசும் மலர்களையும் பரவையார் எந்த, அப்பூசனைகள் யாவையும் ஏற்று உளம் நெகிழ்கின்றார் சேரனார்.
பின் திருவெண்ணீற்றினைப் பெற்றுத் திருமுடியில் அணிந்து கொள்கின்றார். இவ்விதமாய், சிவஞானச் சுடராய் எழுந்தருளியிருந்த சுந்தரருடன் திருவமுது செய்யப் பெற்றமையாலும், திருத்தொண்டினால் செம்மையுற்றுச் சிறந்திருந்த பரவையாரின் பூசனைகளை ஏற்றிருந்த தன்மையினாலும், மெய்த்தொண்டின் மாண்பினை முழுமையாய்ப் பெற்றவராய் வன்தொண்டரின் திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றார் சேரமான் நாயனார்.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - திருப்பாடல் 78)
ஆய சிறப்பிற் பூசனைகள் அளித்தஎல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பினுடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொற் கழல்பணிந்தார்
No comments:
Post a Comment