சுந்தரர் (திருவதிகை எல்லையில் திருவடி தீட்சை):

(1)
சுந்தரர் தில்லையை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகையின் எல்லையை அடைகின்றார். அப்பொழுது அந்திப் பொழுது, நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகைப் பரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற புண்ணியப் பதி ஆதலின் அதனுள் பாதம் பதிக்கவும் அஞ்சி, எல்லையிலுள்ள 'சித்தவடம்' எனும் திருமடமொன்றில் தங்குகின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  229)
உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்து 
அடையும் அதற்கஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையில் சித்தவடமடம் புகுந்தார்.

(குறிப்பு):
மேற்குறித்துள்ள திருப்பாடலில் 'அப்பர் அடிகள் கைத்தொண்டு புரிந்துள்ள காரணத்தால்' எனும் குறிப்பிற்கு 'சுவாமிகள் சூலை நீங்கிப் பேரருள் பெற்றுள்ள தலம்' என்றே பொருள் கொள்ளுதல் சிறப்பு. ஏனெனில் அப்பர் சுவாமிகள் கைத்தொண்டு புரிந்திருந்த எண்ணிறந்த திருத்தலங்களுக்கு நம் சுந்தரனார் யாத்திரை மேற்கொண்டு தரிசித்துள்ளது தெளிவு.   

(2)
அதிகை மேவும் ஆதி மூர்த்தியைக் காதலுடன் உளத்தில் நினைந்தவாறு துயில் கொள்ள முனைகின்றார் நம்பியாரூரர். வீரட்டானேஸ்வரப் பரம்பொருள் கிழ வேதியரின் திருவடிவில் அங்கு எழுந்தருளி வந்து, பிறிதொருவர் அறியா வண்ணம் அம்மடத்துள் துயில்பவர் போல் திருக்கோலம் பூண்டு, வன்தொண்டரின் சென்னிமிசை தன் திருவடி மலர்களைப் பதித்துப் பேரருள் புரிகின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  231)
அதுகண்டு வீரட்டத்து அமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய் முன்னொருவர் அறியாமே
பொதுமடத்தினுள் புகுந்து பூந்தாரான் திருமுடிமேல் 
பதும மலர்த்தாள் வைத்துப் பள்ளிகொள்வார் போல் பயின்றார்.

(3)
துணுக்குற்று எழும் சுந்தரனார் 'வேதியப் பெரியவரே! எதன் பொருட்டு உம்முடைய அடிகளை என் தலை மீது வைக்கின்றீர்' என்று வினவ, அதிகை முதல்வரோ 'அப்பனே! வயது முதிர்ந்த காரணத்தினால் இவ்வாறு நிகழ்ந்தது போலும்' என்றருளிச் செய்கின்றார். ஆரூரர் பிறிதொரு இடத்திற்குச் சென்று துயில் கொள்ள முனைய, மதிசூடும் அண்ணலார் அவ்விடத்தும் சென்று ஆரூரரின் சென்னி மீது தன் திருவடி மலர்களைச் சூட்டி அருள் புரிகின்றார்.   

(4)
விரைந்தெழும் சுந்தரனார் 'இவ்விதம் என்னைப் பலகாலும் மிதிக்கின்ற நீர் யார்?' என்று உறுதிபட வினவ, கங்கையைச் சடையில் மறைத்தருளும் கண்ணுதற் கடவுளோ 'நம்மை அறிந்திலையோ?' என்றருளித் தன் திருவுருவம் மறைக்கின்றார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  233)
அங்குமவன் திருமுடிமேல் மீண்டும்அவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவலூராளி
இங்கென்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்என்னக்
கங்கைசடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான்

(5)
முதியவராய் வந்தது மறை முதல்வரே என்றுணரும் நாவலூர் வேந்தர் 'பிறைமதிப் பரம்பொருளே, ஆலமுண்ட அண்ணலே, 'என்றேனும் உன் திருவடிகளை அடியவனின் சென்னி மீது சூட்டியருள மாட்டாயா' எனும் பெருவிருப்புடன் வாழ்ந்திருந்த அடிநாயேன், அவ்வருட் செயலை நீயின்று புரிய வருகையில் உணராது இருந்தேனே' என்று உளமுருகப் பாடுகின்றார்,
-
(திருவதிகை: சுந்தரர் தேவாரம் - முதல் திருப்பாடல்)
தம்மானை அறியாத சாதியார்உளரே,
சடைமேற்கொள் பிறையானை; விடைமேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை; விடையானைக் கறைகொண்ட கண்டத்து
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத்திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்,
எம்மானை; எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை; இறைபோதும் இகழ்வன்போல் யானே!!!

No comments:

Post a Comment