சுந்தரர் (அவதார நிறைவுற்றுத் திருக்கயிலை நாதரைப் பணிந்து மகிழ்தல்):

சுந்தரர் வருகை புரிவதன் முன்னமே, சேரமான் பெருமாள் நாயனார் தம்முடைய புரவியில் ஆகாய மார்க்கமாய்ப் பயணித்துத் திருக்கயிலைச் சாரலைச் சென்றடைகின்றார். பின்னர் வன்தொண்டர் அயிராவணமாகிய வெள்ளை யானையில் எழுந்தருளி அவ்விடம் சேர, இருபெரும் திருத்தொண்டர்களும் தெற்கு வாயிலின் உட்புகுந்து செல்கின்றனர்.

(1)
இறைவரின் அருளாணை இல்லாமையால் சேரனார் திருஅணுக்கன் வாயிலிலேயே தடையுற்று நின்றிருக்க, நாவலூர் வேந்தர் அவ்வாயிலுள் மேலும் முன்னேறிச் சென்று திருக்கயிலைப் பரம்பொருளின் திருச்சன்னிதியினைச் சென்றடைகின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 41)
அங்கண் எய்திய திருஅணுக்கன் திருவாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர்; தம்பிரான் அருளாலே
பொங்கு மாமதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு

(2)
கோடி சூரியப் பிரகாசத்துடன் மணியாசனத்தில் அம்மையோடு எழுந்தருளியிருந்த கண்ணுதற் பரம்பொருளின் திருமுன்னர் வீழ்ந்தெழுந்து, நெடுநாட்கள் பிரிந்திருந்த கன்றானது தாய்ப் பசுவினைச் சென்று அணையுமாற் போல, விரைந்து சென்று நதி சூடும் விமலனாரின் அருகணைந்து பலவாறு போற்றி செய்து தொழுகின்றார். அம்பிகை பாகத்து அண்ணலாரும் 'ஆரூரனே, வந்தனையோ' என்று திருவாய் மலர்ந்து பேரருள் புரிகின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 42)
சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்தெழுந்து சேணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந்தது எனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெரும் தொண்டரை நேரிழை வலப்பாகத்(து)
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய

(குறிப்பு: 'நேரிழை வலப்பாகத்(து) ஒன்றும் மேனியர்' என்பது தெய்வச் சேக்கிழாருக்கே உரித்தான தனித்துவச் சொல்லாடல்) 

(3)
வன்தொண்டனார், உச்சி கூப்பிய கையினராய்க் கண்ணருவி பாய, 'அடியனேனின் பிழைகள் யாவையும் பொறுத்து ஆட்கொண்டு, எய்தியிருந்த பிறவித் தொடர்பறுத்து, அடியேனின் தகுதிக்கு ஒருசிறிதும் ஒவ்வாத முத்திநெறியினை அருளியுள்ள நின் பெருங்கருணையினை என்னென்று புகல்வேன் ஐயனே' என்று உளமுருகத் துதித்து, விதிர்ப்புற்றுப் பன்முறை பணிந்தெழுந்து போற்றி செய்து, சிவானந்தம் மென்மேலும் பல்கிப் பெருகிய நிலையில் தன்வயமற்றுச் செயலொன்றும் அறியாதவராய் நின்றிருக்கின்றார், 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 43):
அடியனேன் பிழை பொறுத்தெனை ஆண்டு கொண்டத் தொடக்கினை நீக்கி
முடிவிலா நெறி தருபெரும் கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்

No comments:

Post a Comment