சுந்தரர் (திருவாரூரில் வலக்கண் பார்வை பெற்று மகிழ்தல்):

(1)
சுந்தரர் திருவாரூர் இறைவரிடம் வலக்கண் பார்வையை அளித்தருளுமாறு பலப்பல வகைகளில் முறையிட்டு மன்றாடுகின்றார், அந்நிலையிலும் இறைவர் அருளாதிருக்கக் கண்டு 'வாழ்ந்து போதீரே' என்று வெகுண்டு பாடுகின்றார்.

(2)
மூலட்டான முதல்வர் தோழரின் வேதனைக்குத் திருவுள்ளம் இரங்கி, வன்தொண்டனாரைக் கருணைத் திருநோக்கால் பார்த்தருளி, வலக்கண் ஒளியினை மீண்டும் அளித்துப் பேரருள் புரிகின்றார். சுந்தரனார் கண்மலர்களால் விழித்துப் பார்த்து முகமலர்ந்து; அகமெலாம் குளிர்ந்து, ஆரூர் மேவும் அற்புதக் கடவுளைக் கண்களாரத் தரிசித்துப் பெரும் காதலுடன் வீழ்ந்து பணிகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 310)
பூத முதல்வர் புற்றிடம் கொண்டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரி வேதனைக்(கு) இரங்கிக் கருணைத் திருநோக்(கு) அளித்தருளி
சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்

(2)
பல மாதங்களுக்குப் பின்னர் ஆரூர் இறைவரைத் தரிசிக்கப் பெறுகின்றமையால், பன்முறை வீழ்ந்தெழுந்தும் நிறைவு ஒருசிறிதும் காணாதவராய் இறைவரின் திருவடிச் சிறப்பினை பலப்பல உரைத்து போற்றிய வண்ணமிருக்கின்றார் ('மிகப் பரவி' என்கின்றார் தெய்வச் சேக்கிழார்). 'தியாகேசப் பெருமானின் பரிபூரணத் திருவருளுக்கு மீண்டும் உரியராகி விட்டோம்' என்று மென்மேலும் களிப்புற்றவராய் ஆடுகின்றார்; பாடுகின்றார்; புற்றிடம்கொண்ட முதல்வரின் திருவருளை இருகண்களாலும் பருகியவாறு, சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 311)
விழுந்தும் எழுந்தும் பலமுறையால் மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம்பொற் புற்றின் இடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்

(3)
அர்த்தஜாம வழிபாட்டுக் காலம் நிறைவுறும் வரையிலும் திருவாரூர் மேவும் தேவதேவரைப் பணிந்தேத்தி, திருச்சன்னிதியை மற்றொருமுறை வலமாய் வந்து தொழுதுப் பின் தேவாசிரியன் மண்டபத்தினைச் சென்று சேர்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 312)
காலம் நிரம்பத் தொழுதேத்திக் கனகமணி மாளிகைக் கோயில்
ஞாலமுய்ய வரும்நம்பி நலம்கொள் விருப்பால் வலம்கொண்டு
மாலும் அயனு(ம்) முறையிருக்கும் வாயில் கழியப் புறம்போந்து
சீலமுடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கணைந்தார்

No comments:

Post a Comment