சுந்தரர் (ஒற்றியூர் ஆலய மகிழ மரத்தருகில் நிகழ்ந்தேறிய அதிசய சபதம்):

(1)
சங்கிலியார், அதிகாலைப் பொழுதில்; இறைவரின் திருப்பள்ளியெழுச்சிக்கு மாலை தொடுக்கும் பொருட்டு, அத்தொண்டு புரிந்து வரும் தோழியர் சிலருடன் ஒற்றியூர் ஆலயத்திற்குச் செல்கின்றார். சுந்தரனார் அங்கு முன்னமே சங்கிலியாரின் வருகையினை எதிர்நோக்கி இருக்கின்றார். 

(2)
தோழியரோடு வரும் சங்கிலியாருக்கு அருகாமையில் சென்று, சிவமூர்த்தி முந்தைய இரவுப் பொழுதில் அருள் புரிந்துள்ள தன்மையினை எடுத்துரைக்கின்றார். சிவஞானச் செல்வியாரான சங்கிலியார் எதிர்மொழி ஏதும் கூறாமல், நாணத்துடன் ஒருவாறு ஒதுங்கி உட்செல்லத் துவங்குகின்றார்.  

(3)
அவர்தமைப் பின்தொடர்ந்து செல்லும் நம்பிகள், 'பிரியாமையாகிய வாக்கினை அளிக்க, பிறைமதிப் பரம்பொருளான ஆதிபுரீஸ்வர மூர்த்தியின் திருச்சன்னிதிக்கு வருவீராக' என்றருளிச் செய்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 257):
அங்கவர்தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை உமக்கிசையும் படிஇயம்பத்
திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்

(4)
சங்கிலியார் வாயிலாக இறைவர் உணர்த்தியிருந்த இரகசியக் குறிப்பினை அறிந்திருந்த அத்தோழியரும், 'விண்ணோர் தலைவரின் திருமுன்னர் இவ்வுறுதியினைக் கூறுதல் முறையன்று' என்கின்றனர். நம்பிகளும், இறைவரின் திருவிளையாடலை அறியாதவராய், 'அவ்வாறாயின் பிறிதொரு இடத்தினைக் கூறுவீர்' என்றுரைக்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 258):
எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர் நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான் செய்வ(து) எங்கென்று கூறுதலும்

(5)
தோழியரும், 'தல விருட்சமான மகிழ மரத்தருகில் உறுதி கூறினால் போதுமானது' என்றியம்ப, வன்தொண்டர் திகைத்து; மனமயங்கி, 'முதலில் ஒப்புக் கொண்டு பிறகு மாற்றிக் கூறுவதென்பது இயலாது' என்று துணிந்து, 'அவ்வாறே செய்வோம், அனைவரும் மகிழின் கீழ் செல்வீர்' என்று புகல்கின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 259):
மாதர்அவர் மகிழ்க்கீழே அமையுமென மனமருள்வார்
ஈதலராகிலும் ஆகும் இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீரென மகிழ்க்கீழ் அவர்போதப் போயணைந்தார்

(6)
அருந்தவச் செல்வியாரான சங்கிலியார் காண, சைவமுதல் தொண்டரான சுந்தரனார் ஒற்றியூர் முதல்வர் எழுந்தருளி இருக்கும் அம்மகிழ மரத்தினை மும்முறை வலம் வந்து, 'இவ்விடத்தினின்று யான் அகன்று செல்லேன்' என்று உறுதி கூறுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 260):
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவா(து) இங்(கு) யான்அகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனல்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்

(7)
'தம்பிரான் தோழனார் தலங்கள் தோறும் சென்று பாடிப் பரவுவதையே நியமமாகக் கொண்டொழுகுபவர்' என்று நன்கு உணர்ந்திருந்த சங்கிலியாரின் உளத்திலோ பெரும் சஞ்சலம், 'இறைவரின் ஆணையினாலன்றோ  இந்நிகழ்வினைக் காண நேர்ந்தது, இதனால் நம் ஆருயிர்த் தலைவரான நம்பிகளுக்கு யாது நேருமோ?' என்று பெரிதும் அயர்வுற்று மனமயங்கி நிற்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 261):
மேவியசீர் ஆரூரர் மெய்ச்சபத வினை முடிப்பக்
காவியினேர் கண்ணாரும் கண்டுமிக மனம்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன் தம்பிரான் பணியால்என்(று)
ஆவிசோர்ந்(து) அழிவார் அங்கொரு மருங்கு மறைந்(து) அயர்ந்தார்

No comments:

Post a Comment