சுந்தரர் (கானாட்டுமுள்ளூரில் எதிர்க்காட்சி):

ஆலயத்தினை அடையுமுன்னரே, அத்தலத்துறை இறைவர் (பிறிதொரு வடிவில் தோன்றாமல்) தன் சுயவடிவிலேயே திருக்காட்சி தந்தருளும் நிகழ்வினை 'எதிர்க்காட்சி' என்பர். வன்தொண்டருக்கு நான்கு திருத்தலங்களில் இவ்விதமான திருக்காட்சி கிடைக்கப் பெற்றுள்ளதாகப் பெரிய புராணம் பறைசாற்றுகின்றது, அவை முறையே சீர்காழித் தல எல்லையில்; திருப்பனையூர்; கானாட்டுமுள்ளூர் மற்றும் திருக்கோலக்கா. 

தம்பிரான் தோழர், தல யாத்திரையாகச் செல்லும் வழியில், காவிரியின் வடகரையிலுள்ள கானாட்டுமுள்ளூர் எனும் திருத்தலத்தினைச் சென்றடைகின்றார். சோலைகளால் சூழப்பெற்று, செந்நெற் பயிர்கள் விளைந்திருக்கும் பசுமையான வயல்களினூடே நடந்தவாறு அங்குள்ள சிவாலயம் நோக்கிச் செல்லுகையில், தல இறைவரான பதஞ்சலிநாதப் பரம்பொருள் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார். நம்பியாரூரர் உளமுருகிப் பணிந்து 'கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே' எனும் பனுவலினால் மறைமுதல்வரைப் போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 120):
கானாட்டுமுள்ளூரைச் சாரும் போது கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய துணைப்பாத மலர்கண்டு தொழுதேனென்று
வானாளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியினை எய்தச் செல்வார்

(சுந்தரர் தேவாரம்: கானாட்டுமுள்ளூர் - திருப்பாடல் 1)
வள்வாய மதிமிளிரும் வளர் சடையினானை 
மறையவனை; வாய்மொழியை வானவர் தம்கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக்
கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே!!!

No comments:

Post a Comment