சுந்தரர், காஞ்சிப் பதியில்; ஏகம்ப இறைவரின் திருவருளால் இடக்கண் பார்வையைப் பெற்று மகிழ்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருஆமாத்தூர்; திருவரத்துறை முதலிய தலங்களைத் தரிசித்துப் பரவி வரும் நிலையில், சரும நோயொன்றினாலும் அவதியுற நேரிடுகின்றது. திருவருளை வழுத்தியவாறே திருஆவடுதுறையை வந்தடைகின்றார் (வன்தொண்டர் ஆவடுதுறைக்கு இதற்கு முன்னரும் ஒருமுறை வருகை புரிந்துள்ளார்).
(1)
அடியவர்கள் எதிர்கொள்ள ஆலயத்துள் புகுந்து மாசிலாமணீஸ்வரப் பரம்பொருளைத் தொழுது, 'பெருமானே, கண்ணொன்றிலாத நிலையில் இச்சரும நோயுமெனை வாட்டுகின்றது. எளியேனுக்கு உனையன்றி பிறிதொரு உறவுமுண்டோ? அஞ்சலென்று அருளாய்' என்று உளம் வெதும்பி முறையிடுகிறார் ('கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்'),
(திருவாவடுதுறை: சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 2)
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனை ஆண்டு கொண்டானே
கண்ணிலேன் உடம்பில்அடு நோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்
தெண்ணிலா எறிக்கும் சடையானே தேவனே திருவாவடுதுறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்றருளாய் ஆர்எனக்குறவு அமரர்கள் ஏறே
(2)
பின் அப்பதியினின்றும் நீங்கித் திருத்துருத்தியினை அடைந்து வணங்கி, 'ஐயனே! அடியேனை வாட்டும் இச்சரும நோயினைப் போக்கியருள வேண்டும்' என்று விண்ணப்பித்துத் தொழுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 297):
திருப்பதிகம் கொடுபரவிப் பணிந்து திருவருளால் போய்
விருப்பினொடும் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல்
அருத்தியினால் புக்கிறைஞ்சி அடியேன் மேலுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள வேண்டுமென வணங்குவார்
No comments:
Post a Comment