சுந்தரரும் பரவையாரும் திருவாரூரில் திருவருளால் மகிழ்ந்திருக்கும் நாட்களில், வன்தொண்டர் பரவையாரிடம் 'முதுகுன்றப் பெருமான் முன்னர் நமக்கருளிய நிதியங்களை மணிமுத்தாற்றிலிட்டேன், அதனை நம் துணைவராகிய திருவாரூர் இறைவரின் கமலாலயக் குளத்திலிருந்து, அப்பெருமானின் அருளால் எடுத்து வருதற்கு உடன் வருவாய்' என்றுரைக்கின்றார் ('துணைவர்' என்று உரிமையன்பினால் சுந்தரனார் குறிப்பது நெகிழ்விக்கும் சொல்லாடலன்றோ).
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 127):
நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம் துணைவர்அவர்
கோயிலின் மாளிகை மேல்பால் குளத்தில் அவர்அருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப் போதுவாய் எனப்புகல
பரவையார் புன்முறுவலுடன் 'இது என்ன அதிசயம்' என்று வியப்புற, 'பரவையே! நம் பெருமானின் அருளால் அப்பொன்னினை எடுத்துனக்குத் தருவது ஒருக்காலும் பொய்க்காது' என்று உறுதி கூறிப் பூங்கோயில் மேவும் புராதனரைத் தரிசித்துப் போற்றி, ஆலயத்தினை வலமாய் வந்து மேற்குப் புறத்திலுள்ள திருக்குளத்தினை அடைகின்றார். பரவையாரைப் படித்துறையிலேயே இருத்திக் குளத்தினுள் இறங்கி, அப்பொழுது இட்டாற் போன்று பொற்குவியல்களைத் தேடத் துவங்குகின்றார்.
சுந்தரரின் திருப்பாடலைக் கேட்கும் திருவுள்ளத்தால் இறைவர் பொன்னினைத் தந்தருளாமல் திருவிளையாடல் புரிகின்றார். அது கண்டு பரவையாரும் விளையாட்டாய்ச் சிறிது பரிகசிக்கும் தொனியில் 'ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் எம் தலைவரே, இறைவர் தமக்கருளும் தன்மையும் இதுவோ?' என்று புகலத் தம்பிரான் தோழரும் 'பொன்போலும் திருமேனியுடைய பரம்பொருளே, புலித்தோல் அணிந்தருளும் புண்ணியனே, முப்புரமெரித்தருளும் முதுகுன்ற முதல்வனே, இப்பரவையிடத்துத் தோன்றும் பரிகாசப் புன்னகை மாறுமாறுத் தாம் முன்னர் அறிவித்த வண்ணம் இவ்விடத்தில் பொற்குவியல்களை வருவித்துத் தந்தருள வேண்டும்' என்று உளமுருகப் பாடுகின்றார்,
(சுந்தரர் தேவாரம்: திருமுதுகுன்றம் - திருப்பாடல் 1)
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவைஇவள் தன்முகப்பே
என்செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே!!!
ஒரு சுவையான குறிப்பு, சுந்தரனார் நின்று பாடும் இடமோ தியாகேச மூர்த்தியின் ஷேத்திரத் திருக்குளத்தில் எனினும் போற்றிப் பாடுவதோ முதுகுன்றப் பரம்பொருளின் அருளினை வேண்டி, அளித்தவரிடமே முறையிட்டுப் பெறுவதன்றோ முறை! 8ஆம் திருப்பாடல் நிறைவுறும் வரையிலும் இறைவர் அருளாதிருக்க, அற்புதத் தன்மை வாய்ந்த 9ஆம் திருப்பாடலில் முதுகுன்ற இறைவரை ஆடல் வல்லானின் திருநாமத்தால் 'கூத்தா தந்தருளாய்' என்று விண்ணப்பித்துப் போற்றுகின்றார்,
(சுந்தரர் தேவாரம்: திருமுதுகுன்றம் - திருப்பாடல் 9)
ஏத்தாது இருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.
இறையனார் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பொன்னினைத் தருவித்தருள, முன்னர் முதுகுன்றப் பெருமானிடம் வேண்டியிருந்தது போலவே, திருவாரூர் வாழ் அன்பர்கள் யாவரும் 'இதென்ன அதிசயம், இத்தன்மையில் அருளைப் பெற்றோரும் உளரோ? ' என்று திருவருட் திறத்தினை வியந்து போற்றப் பெரு நிதியங்களைக் கரையில் கொணர்ந்து சேர்க்கின்றார் தம்பிரான் தோழர்.
No comments:
Post a Comment