சுந்தரர், சேரமான் நாயனார் கோலோச்சும் கொடுங்களூரை நோக்கிச் செல்லும் வழியில் கொங்குநாட்டிலுள்ள திருப்புக்கொளியூர் எனும் திருத்தலத்தினை அடைகின்றார். சிவ வேதியர் பலர் வாழும் மாட வீதியை நெருங்குகையில், எதிரெதிராய் அமைந்திருந்த இரு இல்லங்களில் ஒன்றில் மங்கல ஒலியும் மற்றொன்றில் அழுகுரலும் ஒரே சமயத்தில் கேட்க, அதுகுறித்து அங்குள்ள அந்தணர்களிடம் வினவுகின்றார்.
அவர்களும் நம்பிகளை வணங்கி, 'இவ்விரு வீடுகளிலும் வாழ்ந்திருந்த 5 வயது பாலகர்கள் முன்பொரு சமயம் மடுவினில் விளையாடியிருந்த சமயத்தில் ஒரு பிள்ளையை முதலையொன்று விழுங்க, அதனின்றும் தப்பிப் பிழைத்த மற்றொரு பாலகனுக்கு அன்று உபநயன விழா நிகழ்ந்தேறி வருகின்றது. மாண்ட பிள்ளையைப் பெற்றவர் தங்களது புதல்வனும் பிழைத்திருந்தால் இது போன்றதொரு பூணூல் விழாவினைச் செய்திருக்கலாமே என்று அழுத வண்ணமிருக்கின்றனர்' என்றுரைக்கின்றனர்.
இதனைக் கேள்வியுறும் சுந்தரனாரின் உள்ளம் மிகவும் இரங்கிக் கனிகின்றது, அதற்குள்ளாக அப்பிள்ளையைப் பெற்றோர் சுந்தரனாரின் வருகையறிந்து, தங்கள் கவலைகள் யாவும் மறந்தவராய், விரைந்து வந்து தம்பிரான் தோழரின் பொன்போலும் திருவடி மலர்களைப் பணிந்து தொழுகின்றனர். சுந்தரனாரும் எதிர்வணங்கி, 'இன்ப மைந்தனை இழந்தவர் நீங்களோ?' என்று கனிவுடன் வினவ, அவர்களும் 'சுவாமி! அது முன்னர் நிகழ்ந்தேறிய நிகழ்வு, தங்களைப் பலகாலும் தரிசித்துப் பணிய முயன்றிருந்தோம், எங்கள் அன்பு பொய்க்கவில்லை, தாம் இவ்விடத்து எழுந்தருளும் பெறற்கரிய பேற்றினை இன்று பெற்றோம்' என்று முகமலர்ந்து தொழுகின்றனர்.
சுந்தரர், 'மைந்தனை இழந்த துன்பமும் மறந்து நாம் வரப்பெற்றமைக்கு இவ்விதம் மகிழ்கின்றனரே, சிவனடியார் மீது இத்தூய உள்ளத்தினருக்கு எத்துனை ஈடுபாடு' என்று நெகிழ்ந்து, 'மாண்ட பாலகனைத் திருவருளால் அழைப்பித்துக் கொடுத்த பின்னரே அவிநாசிப் பரம்பொருளின் திருவடி தொழுவேன்' என்று சங்கல்பிக்கின்றார். 'முதலை விழுங்கிய மடு எங்குள்ளது' என்று வினவி அனைவருடனும் அவ்விடத்திற்குச் செல்கின்றார். நீர்வளமின்றி வறண்ட நிலையில் காணப்பெறும் அவ்விடத்தில் 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும்' எனும் பனுவலால் அவிநாசியுறை ஆதியைப் போற்றுகின்றார், 'கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே' எனும் 4ஆம் திருப்பாடலைப் பாடிய கணத்திலேயே எண்ணுதற்கரிய அற்புதமொன்று அங்கு அரங்கேறத் துவங்குகின்றது,
(சுந்தரர் - அவிநாசி தேவாரம் - திருப்பாடல் 4)
உரைப்பார் உரைஉகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடுஅரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
அவிநாசி முதல்வரின் ஏவலால், கூற்றுவன் வறண்டிருந்த அம்மடுவை நீரினால் நிறையுமாறு செய்து, முதலையை உயிர்ப்பித்துப் பின் அதன் வாயினின்றும், உயிர்ப்பிக்கப் பெற்ற பாலகனை, கடந்த ஆண்டுகளின் வளர்ச்சியோடும் கூடிய நிலையில் உமிழுமாறு செய்கின்றான். பிள்ளையின் தாயார் ஓடோடிச் சென்று மகனை வாரியணைத்து எடுத்துக் கொண்டு, கண்ணருவி பாய, கணவனாருடன் விரைந்து சென்று சுந்தரரின் திருவடிகளில் நன்றிப் பெருக்குடன் வீழ்ந்து பணிகின்றார். விண்ணவர் கற்பகமலர் தூவி வாழ்த்துகின்றனர்.
யாவரும் அதிசயமுறுகின்றனர், 'அங்குள்ள அந்தணர்கள் தங்களது மேல் வஸ்திரத்தை விண்ணில் வீசியெறிந்து சிவகோஷம் எழுப்பினர்' எனும் அரிய செய்தியினைத் தெய்வச் சேக்கிழார் இவ்விடத்தில் பதிவு செய்கின்றார் ('மறையோர் எல்லாம் உத்தரியம் விண்ணில் ஏற விட்டார்த்தார்'). வன்தொண்டர் திருவுள்ளம் மிக உவந்து, திருவருளால் மீண்டெழுந்த அப்பிள்ளையுடன் அவிநாசி மேவும் ஆதிப் பரம்பொருளைப் பணிகின்றார். பின் முரசொலிக்க அப்பிள்ளைக்கு பூணூல் கல்யாணத்தை செய்வித்து ஆசி கூறி அனைவரிடமும் விடைபெற்றுக் கொடுங்களூர் நோக்கி மேலும் முன்னேறிச் செல்கின்றார்.

No comments:
Post a Comment