சுந்தரர் (பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா)

வெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்தில் வென்று சுந்தரரை அடிமை கொள்ளும் சிவமூர்த்தி, தன் வசிப்பிடத்தைக் காண்பிப்பதாகக் கூறியவாறு முன்செல்ல, அனைவரும் இறைவரைத் தொடர்ந்து செல்கின்றனர். ஆலய வளாகத்துள் புகுந்து இறைவர் திருவுருவம் மறைத்தருள, சுந்தரனார் மட்டும் ஆலயத்துள் முன்னேறிச் செல்கின்றார். முதியவரைக் எங்குமே காணாது ஆரூரர் திகைப்புற்று நின்றிருக்க, வெண்ணெய்நல்லூர் மேவும் ஆதிப் பரம்பொருள் உமையம்மையாருடன் விண்மிசை ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் தோன்றுகின்றார்.

(1)
'சுந்தரா! முன்னமே நீ நமக்குத் தொண்டன், நமது கட்டளையால் இப்புவி மீது தோன்றினாய். தக்கதொரு தருணத்தில் நாமே வந்து உனைத் தடுத்தாட்கொண்டோம்' என்றருள் புரிகின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 213)
முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் என்றார்

(2)
இறைவரின் அமுதமாம் திருவாக்கினைச் செவிமடுக்கும் சுந்தரர், தாய்ப்பசுவின் குரல் கேட்ட கன்று போல் கதறுகின்றார். உடலெங்கும் புளகமுற; அன்பின் மிகுதியால் விதிர்விதிர்த்து உச்சி கூப்பிய கையினராய், 'அம்பலத்தாடும் ஐயனே, நீரா அடியேனை வலிய வந்து ஆட்கொண்டது?' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார், 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 214)
என்றெழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி கரசரணாதி அங்கம் 
துன்றிய புளகமாகத் தொழுதகை தலைமேலாக
மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்ட(து) என்றார்

(3)
மதி சூடும் அண்ணலார் 'நம்மோடு வன்மையான சொற்களால் வாதிட்டமையால் வன்தொண்டன் எனும் நாமம் பெற்றாய்! நமக்கு விருப்பமான அர்ச்சனை பாடல்களேயாம், ஆதலின் நம்மைச் சொற்றமிழால் பாடுக' என்றருளிச் செய்கின்றார். 

(4)
வன்தொண்டனார் கண்ணருவி பாய, 'வேதியனாய் எமை வழக்கில் வென்று, முந்தைய உணர்வினையும் அளித்து; அரியதொரு முறையில் ஆட்கொண்டருளிய அருட்பெரும் சுடரே! நாயினேன் உம்முடைய குணப்பெரும்கடலினை எங்கனம் உணர்ந்து யாது சொல்லி பாடுவேன்' என்று அகம் குழைந்துருகி விண்ணப்பிக்கின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 218)
வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்(கு) உணர்வு தந்(து) உய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன் குணப்பெரும் கடலை நாயேன்
யாதினை யறிந்(து) என் சொல்லிப் பாடுகேன் எனமொழிந்தார்

(5)
அம்பிகை பாகத்து அண்ணலும், 'முன்பு நமைப் பித்தனென்று அழைத்தனையே, அதனையே நம் நாமமாக அமைத்துப் பாடுவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்தருள, நாவலூர் வேந்தரும் இறைவரின் திருவாக்கினைச் சிரமேற் கொண்டு, தன்வயமற்ற நிலையில் பாடத் துவங்குகின்றார், 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 219)
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்தனென்றே மொழிந்தனை ஆதலாலே
என்பெயர் பித்தனென்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெரும் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்
-
(திருவெண்ணெய்நல்லூர் தேவாரம் - திருப்பாடல் 1)
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

No comments:

Post a Comment