சுந்தரர் (ஒற்றியூர் இறைவரிடம் வைத்த அதிசய விண்ணப்பம்):

(1)
ஒற்றியூர் இறைவர் சங்கிலியாரின் கனவில், 'சுந்தரன் உனைப் பிரியேன் என்று வாக்களிப்பான்' என்றருள் புரிந்த பின்னர் வன்தொண்டரின்பால் மீளவும் எழுந்தருளிச் சென்று, 'சங்கிலியுடன் மணநிகழ்வு நடந்தேற அவள் குறையொன்றினை நீ முற்றுவித்தல் வேண்டும்' என்றருளிச் செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 244):
வேயனைய தோளியார் பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும் நிலைஉரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால் அமைப்பதுள(து) என்றருள

(2)
நம்பிகள் ஆலமுண்ட அண்ணலின் திருவடிகளை மகிழ்வுடன் பணிந்து போற்றி அச்செயல் யாதென விண்ணப்பிக்க, மதிசூடும் முதல்வரும் 'சங்கிலியைப் பிரியேன் என்றொரு சபதத்தினை நீ இவ்விரவுப் பொழுது முடியுமுன்னர் செய்தல் வேண்டும்' என்றருளிச் செய்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 245):
வன்தொண்டர் மனம்களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்றகுறை யாதென்ன நீஅவளை மணம்புணர்தற்(கு)
ஒன்றியுடனே நிகழ ஒருசபதம் அவள்முன்பு
சென்றுகிடைத்(து) இவ்விரவே செய்கஎன அருள்செய்தார்

(3)
தம்பிரான் தோழனார் 'முக்கண் முதல்வர் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் தோறும் சென்று தரிசித்துப் பரவுவதையே நியமமெனக் கொண்டிருக்கும் தம்மால் ஒற்றியூரிலேயே தங்கியிருப்பது நடவாதவொன்று' என்று தெளிந்து, 'ஐயனே, அடியவனின் சார்பாக ஓர் விண்ணப்பம் உண்டு' என்று தொழுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 247):
வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பர்இவர் பிறபதியும் நயந்தகோலம் சென்று
கும்பிடவே கடவேனுக்(கு) இதுவிலக்காம் எனும்குறிப்பால்
தம்பெருமான் திருமுன்பு தாம்வேண்டும் குறையிரப்பார்

(4)
தமிழ்வேந்தரான நம் சுந்தரனார் விடையேறும் விமலனாரின் திருவடிகளைப் போற்றியவாறு, தோழமை உரிமையோடு, இப்புவியில் எவரொருவரும் வைத்திராத  அரியதொரு விண்ணப்பமாய் 'எந்தை பெருமானே, சங்கிலியுடன் அடியவன் உன் திருச்சன்னிதிக்கு சபதம் புரிய வருகையில், ஐயனே நீர் அச்சிவலிங்க மூர்த்தத்தினின்றும் நீங்கி ஆலய வளாகத்திலுள்ள மகிழ மரத்தில் எழுந்தருளி இருத்தல் வேண்டும்' என்று இறைஞ்சுகின்றார்,  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 248):
சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கைஅவள் தனைப்பிரியா வகைசபதம் செய்வதனுக்(கு)
அங்கவளோ(டு) யான்வந்தால் அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடம் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டும் எனத் தாழ்ந்தார்

(5)
அடியர்க்கு எளியரான ஆதி முதல்வரும் அவ்வேண்டுகோளுக்கு உடன்படுவாராய், 'நம்பி  நீ வேண்டிய வண்ணமே செய்வோம்' என்றருள் புரிய, சுந்தரனாரும் மகிழ்ந்து, 'ஐயனே! உம்முடைய திருவருள் இவ்விதமாயின், அடியவனுக்கு இனி அரிதானதொரு செயலும் உளவோ? என்று போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 249):
தம்பிரான் தோழரவர் தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர் நாயகரும் அதற்குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி நாம்செய்தும் என்றருள
எம்பிரானே அரிய(து) இனிஎனக்கென் எனஏத்தி

No comments:

Post a Comment