சுந்தரர் (திருநாவலூருக்கு மீண்டுமொரு யாத்திரை)

சுந்தரர் தில்லையிலிருந்து புறப்பட்டு வழிதோறுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறு தம்முடைய அவதாரத் தலமான திருநாவலூர் நோக்கிப் பயணித்துச் செல்கின்றார். தம்பிரான் தோழரின் வருகையறியும் அப்பதி வாழ் அன்பர்கள் பெருமகிழ்வுடன் நகரினை அலங்கரித்துப் பின் வன்தொண்டனாரை எதிர்கொண்டு வணங்கிப் போற்றியவாறே ஆலயத்திற்குள் அழைத்துச் செல்கின்றனர். அச்சமயத்தில் 'ஹர ஹர' என்று அடியவர்கள் எழுப்பிய ஆர்ப்பொலி 'மூவுலகிலும் சென்று எதிரொலித்தது' என்று போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 169):
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள் என்றலங்கரித்து வந்தெதிர்கொண்டு உள்ளணையச்
செருநாகத்துரி புனைந்தார் செழுங்கோயில் உள்ளணைந்தார்

கருவறையில் அருவுருவில் எழுந்தருளியுள்ள நாவலூருறைப் பரம்பொருளைப் பெரும் காதலோடு பணியும் நம்பியாரூரர் 'கோவலன் நான்முகன்' எனும் திருப்பதிகத்தினால் போற்றி செய்கின்றார். ஒவ்வொரு திருப்பாடலிலும், இறைவர் தம்மை ஆவணம் காட்டி அடிமை கொண்ட அற்புத நிகழ்வினையும், வெண்ணெய்நல்லூர் ஞாயச்சபையில் வழக்காடி வென்ற பேரருட் செயலையும் உளமுருகப் போற்றுகின்றார். 2ஆம் திருப்பாடலில் 'வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்' என்று நெகிழ்கின்றார்.   

(சுந்தரர் தேவாரம்: திருநாவலூர் - திருப்பாடல் 1)
கோவலன் நான்முகன் வானவர்கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீஎழுவித்தவர் ஓரம்பினால்
ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளும்கொண்ட
நாவலனார்க்கு இடமாவது நம்திருநாவலூரே

இது சுந்தரனார் நாவலூருக்கு மேற்கொள்ளும் 2ஆவது யாத்திரையாகும், முன்னர் இறைவரால் தடுத்தாட்கொள்ளப்பெற்று வெண்ணெய்நல்லூரில் 'பித்தா பிறைசூடி' எனும் முதல் பனுவலைப் பாடிப் பரவிய பின்னர் நாவலூருக்கு வருகை புரிந்துப் பாமாலையால் போற்றிப் பரவியுள்ளார், இதனைத் திருமலைச் சருக்கத்தின் பின்வரும் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். எனினும் அச்சமயத்தில் நாவலூர் மன்னர் பாடிய திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை,  

(திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 224):
நாவலர்கோன் ஆரூரன்தனை வெண்ணெய் நல்லூரின்
மேவும் அருட்துறையமர்ந்த வேதியர் ஆட்கொண்டதற்பின்
பூவலரும் தடம்பொய்கைத் திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்

ஒரு நுட்பம், சுந்தரனாரின் 2ஆவது வருகையான இச்சமயத்தில், தாய்; தந்தையரான 'சடையனார்; இசைஞானியாரையோ' அல்லது இளம் பிராயம் முதலே அரண்மனையில் வைத்து தன்னை வளர்த்த, அப்பகுதியின் சிற்றரசரான நரசிங்க முனையரையோ நம்பியாரூரர் எதிர்கொண்டதாகத் தெய்வச் சேக்கிழார் குறிக்காதது வியப்புக்குரியது. 'தடுத்தாட்கொள்ளப் பெற்ற சமயமுதல் இவ்வருகை வரையினில் சுமார் 8 முதல் 10 மாதங்கள் கடந்திருக்கலாம்' என்று ஒருவாறு கணக்கிட்டாலும், 'இக்குறுகிய காலகட்டத்திற்குள்ளாக இப்பெருமக்கள் மூவருமே சிவபதம் பெற்றிருப்பரோ?' எனும் கேள்வியும் உடன் தோன்றும். விடையேறும் பரம்பொருள் உணர்த்தினாலன்றி இவ்வினாவிற்கு விடை காண்பதரிது!!!

No comments:

Post a Comment