சுந்தரர், காவிரியின் வடகரையிலுள்ள மழபாடியைத் தொழுதுப் பின் திருவானைக்கா தலத்தினைச் சென்றடைகின்றார். எதிர்கொண்டு வணங்கிய திருத்தொண்டர்களை எதிர்வணங்கி ஆலயத்துள் சென்று, சிலந்தியும் வெள்ளை யானையும் வழிபாடு செய்த ஜம்புகேஸ்வரப் பரம்பொருளின் திருச்சன்னிதியினை அடைகின்றார்.
உமையன்னை பணிந்தேத்திய அண்டர் நாயகரின் திருவடி மலர்களில் காதலொடு வீழ்ந்தெழுந்து, உடலெங்கும் புளகமுற, பெருநெகிழ்ச்சியினால் கண்ணருவி வெள்ளமெனப் பெருகித் திருமேனியெங்கும் வழிந்தோட, தன்வயமற்ற நிலையில் விம்மித் தொழுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - திருப்பாடல் 75):
செய்ய சடையார் திருவானைக்காவில் அணைந்து திருத்தொண்டர்
எய்த முன் வந்தெதிர் கொள்ள இறைஞ்சிக் கோயிலுள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ் ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்
'மறைகளாயின நான்கும்' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் ஆனைக்காவுடை ஆதியைப் போற்றி செய்கின்றார். ஆனைக்கா அண்ணலின் திருவடிகளைத் தொழும் அன்பர்கள் 'தன்னையும் ஆளாக உடையவர்' என்று திருப்பாடல்கள் தோறும் பணிந்தேத்திப் பரவுகின்றார்,
(சுந்தரர் தேவாரம் - திருவானைக்கா - திருப்பாடல் 1)
மறைகளாயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத்திறையும் தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
7ஆம் திருப்பாடலில் சுவையான வரலாறொன்றினையும் பதிவு செய்கின்றார், சிவமூர்த்தியின் மீது அதீத பக்தி பூண்டிருந்த சோழ மன்னனொருவனின் முத்துமாலை காவிரியில் தவறி விழுந்து ஆற்றோடு சென்று விடுகின்றது. மனமிக வருந்தும் அவ்வேந்தன் ஆனைக்கா அண்ணலிடம், 'அடியவனின் ஆரத்தை ஏற்றருள் செய் ஐயனே' என்று வேண்ட, அவ்வாபரணத்தைத் திருமஞ்சனக் குடத்தில் புகுமாறு செய்து, திருமஞ்சன சமயத்தில் தன்னுடைய திருமுடியில் அதனை சூடிப் பேரருள் புரிந்த அருட்திறத்தினைப் போற்றுகின்றார்.
(சுந்தரர் தேவாரம் - திருவானைக்கா - திருப்பாடல் 7)
தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரம் கொண்டஎம் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே
No comments:
Post a Comment