(1)
அம்பிகை பாகத்து அண்ணலாரின் திருச்சன்னிதியினை வந்தடையும் சேரமான் நாயனார், தொலைவில் நின்றவாறு பெருமகிழ்வுடன் தொழுது, இறைவரிடத்து அன்பு மென்மேலும் பெருகிய நிலையினால் பலவாறு போற்றி செய்து பணிந்திருக்க, கங்கை சூடும் கயிலை முதல்வர் அவ்வழிபாட்டினைப் புன்முறுவலால் ஏற்றருளி, 'நாம் அழையாமல் இவ்விடத்து எய்தியது எதனால்? என்றருளிச் செய்கின்றார்,
(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 45):
மங்கை பாகர்தம் திருமுன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம் அழையாமைநீ எய்தியதென்என அருள்செய்தார்
(குறிப்பு: 'திருமுறுவலின் கதிர்காட்டி' என்பது நெகிழ்விக்குமொரு அற்புதச் சொல்லாடல்)
(2)
சேர வேந்தர் உச்சி கூப்பிய கையினராய், 'அடியவன் நம்பியாரூரரின் திருவடிகளைப் வணங்கிப் போற்றியவாறு, அவர்தம் திருவடிச் சிறப்பினால் மணிவாயிலை வந்தடைந்தேன். பின்னர் எந்தை பெருமானின் பெருங்கருணை வெள்ளத்தால் உம்முடைய திருமுன்னர் வரப்பெற்றேன். கொன்றைசேர் சடையுடைப் பெருமானே, 'இனியும் ஒரு விண்ணப்பம் உண்டு' என்று பணிகின்றார்,
(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 46):
அரசர் அஞ்சலி கூப்பிநின்று அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளதென்று
(3)
சேரனார் 'மறைகளும் மாமுனிவோரும் உணர்ந்து போற்றுதற்கரிய ஆதிமுதற் பொருளே, அடியேனின் பிறவித் தொடர்பறுத்து, வன்தொண்டப் பெருந்தகையின் திருக்கூட்டத்தினில் எளியேனையும் வைத்தருளிய கருணைப் பெருங்கடலே, எந்தை பெருமான் இக்கயிலையில் புறப்பாடு கண்டருளும் சீர்மையைப் போற்றும் திருஉலா ஒன்றினை அன்பினால் புனைந்தேன், அதனைக் கேட்டருளல் வேண்டும்' என்று வணங்க, கயிலையுறைக் கடவுளும் 'பாடுக' என்றருள் புரிகின்றார்,
(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 47):
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவுலாப்புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்
(குறிப்பு: 'வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்' எனும் சேரனாரின் போற்றுதல் அற்புதத் தன்மை வாய்ந்தது, கல்லையும் கசிவிப்பது, இனிமைக்கும் இனிமை சேர்ப்பது).
(4)
பெருகும் அன்புடன் சேரனார் கேட்பித்த அத்திருவுலாப் பனுவலால் திருக்கயிலை நாயகர் திருவுள்ளம் மகிழ்ந்தருளி, திருத்தொண்டர் இருவரின் மீதும் கருணைத் திருநோக்கம் புரிந்தருளி 'ஆரூரனாகிய ஆலால சுந்தரனுடன் இனிதமர்ந்து, இருவருமாய் நம் கணங்களுக்குத் தலைமையேற்று இவ்விடத்து உறைவீர்' என்று பேரருள் புரிகின்றார்,
(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 48):
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறம்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊரனாகிய ஆலால சுந்தரன் உடனமர்ந்(து) இருவீரும்
சார நம்கண நாதராம் தலைமையில் தங்கும் என்றருள் செய்தார்

No comments:
Post a Comment