சுந்தரர் (திருப்பனையூரில் நடனக் கோல தரிசனம்):

(1)
முப்புரி நூல் மார்பரான சுந்தரனார், திருப்புகலூரில் இறைவர் அருளிய செம்பொன் கட்டிகளைப் பரிசனங்கள் சுமந்து வர, அடியவர்களும் உடன் வர, காவிரியின் தென்கரைத் தலமான திருப்பனையூரைச் சென்றடைகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 52):
பதிகம் பாடித் திருக்கடைக்காப்பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரில்இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு நிறையும் நதியும் குறைமதியும்
பொதியும் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூல் மணிமார்பர்

(2)
சிவாலயத்தை நெருங்குகையில் திருப்பனையூர் முதல்வர் விண்மிசை எழுந்தருளி, திருமுடியில் பிறைமதியும் நதியுமாய்; திருநீறு துலங்கும் திருமேனியுடன்; திருச்செவிகளில் குழை தோடுகள் அணி செய்திருக்கத் திருநடக் கோலம் காண்பித்துப் பேரருள் புரிகின்றார். நம்பிகள் அகம் குழைந்துருகிப் பெருகும் காதலுடன் நிலமிசை வீழ்ந்து பணிந்து, காண்பதற்கரிய அத்திருக்கோலத்தைப் பாடல்கள் தோறும் சிறப்பித்து 'அவரே அழகியரே' எனும் பாமாலையால் ஆலமுண்ட அண்ணலைப் போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 53):
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத்தொடும் காட்சி
எய்த அருள எதிர் சென்றங்கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காடவல்லார் அவரே அழகியரென்று 
உய்ய உலகு பெறும்பதிகம் பாடி அருள் பெற்றுடன் போந்தார்

(சுந்தரர் தேவாரம்: திருப்பனையூர் - திருப்பாடல் 1):
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த் 
தோடு பெய்தொரு காதினில் குழை தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்று 
ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே!!!

No comments:

Post a Comment