சுந்தரர் (காமாஷி அன்னையிடம் கண்பார்வைக்காக பரிந்துரை வேண்டித் தொழுதல்):

சுந்தரர், பரவையாருடன் நடந்தேறிய திருமண நிகழ்விற்குப் பின்னர் ஒரு சமயத்திலும், சங்கிலியாரைக் கரம் பற்றிய பின்பொரு சமயமுமாய் இரு முறை காஞ்சீபுரத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். 'முதல் யாத்திரை சமயத்தில் ஏகாம்பரேஸ்வரப் பொருளை முதற்கண் தரிசித்துப் பின்னரே காமாக்ஷி அன்னையைத் தரிசித்துப் பணிந்துள்ள' முக்கியக் குறிப்பினை உளத்துள் இருத்தியவாறு பதிவிற்குள் செல்வோம்.

(1)
சுந்தரர், சங்கிலியாருக்கு 'உன்னைப் பிரியேன்' என்று ஒற்றியூர் இறைவர் முன்பாக அளித்திருந்த வாக்கினை மீறிய காரணத்தால், இரு கண் பார்வையும் மறைப்பிக்கப் பெறுகின்றார். அந்நிலையிலேயே ஒற்றியூரிலிருந்து புறப்பட்டுத் திருமுல்லைவாயில்; திருவெண்பாக்கம்; திருவாலங்காடு; திருவூறல் முதலிய தலங்களில் இறைவரைப் பாமாலையால் போற்றி செய்து, 'ஐயனே, அடியேனின் பிழை பொறுத்து மீண்டும் கண்பார்வையை அளித்தருள மாட்டாயா?' என்று உளமுருகி வேண்டியவாறே காஞ்சி மாநகரை வந்தடைகின்றார். 

(2)
'இறைவர் எவ்விதம் முறையிட்டும் திருவுளம் இரங்கி அருளவில்லையே ' என்று உளம் வெதும்பி அயர்வுற்றிருந்த வன்தொண்டருக்கு நல்லுபாயமொன்று தோன்றுகின்றது. 'உலகீன்ற நம் அம்மையை முதற்கண் தரிசித்துப் பணிந்து, ஏகம்ப முதல்வரிடம் நம் பொருட்டு பரிந்துரைக்குமாறு விண்ணப்பிக்கலாம்' என்று உறுதிபட நினைந்து, அம்மையின் திருக்கோயிலுக்குச் செல்கின்றார்.

(3)
நால்வேதத் தலைவியான காமாக்ஷி தேவி எழுந்தருளியுள்ள காமக்கோட்டத் திருவாயிலில் நின்று 'எமையீன்ற அன்னையே! ஏகம்ப அண்ணலாரின் இடபாகத்துறையும் கருணைப் பெருவெள்ளமே! யாது முறையிட்டும் ஐயன் அருளாதிருக்கின்றார். தாயே! உன் திருவடிகளே புகல், அடியேனின் பொருட்டு ஐயனிடம் பரிந்துரைத்துக் காத்தருள்வது நின் கடன்' என்று கண்ணீர் பெருக்கி முறையிடுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 284):
தேனிலவு பொழில்கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம் ஒழியாத கருணையினால்
ஆனதிரு அறம்புரக்கும் அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில் வணங்கினார் வன்தொண்டர்

(4)
'தொழுது விழுந்தெழுந்(து) அருளால் துதித்து' என்பது தெய்வச் சேக்கிழாரின் அற்புதத் திருவாக்கு. பின்னர் அம்மையிடமிருந்து விடைபெற்று ஏகம்பப் பரம்பொருள் மேவியருளும் ஆலயத்துள் செல்கின்றார். 'அடிமைத் திறத்தோடு கூடிய தோழமை உரிமையை முன் போல் பெற்றிலேனே. பார்வையற்றிருக்கும் இந்நிலையில் இறைவரின் திருமுன்பு சென்று யாது புகல்வேன்?' என்று வருந்தியவாறு, பழுதில்லாத அடியவர்களை முன்செல்ல விட்டு, அப்பெருமக்களின் பின் தயங்கியவாறு செல்கின்றாராம் நம் தலைவரான நம்பிகள். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 285):
தொழுது விழுந்தெழுந்(து) அருளால் துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும் அளித்தழித்தாக்கும் முதல்வர் திருஏகம்பம்
பழுதில் அடியார்முன்பு புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என்மொழிவேன் என்றிறைஞ்சி

No comments:

Post a Comment